புணர்ச்சி இலக்கணம் விதிகள் மற்றும் சான்றுகள் (6th-10th) | TNPSC Group 4 General Tamil

ManiMegala 2

TNPSC Group 2, 2A, மற்றும் Group 4 (VAO), TET போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு பொதுத்தமிழ் : Part - 1 அலகு I : இலக்கணம் - எழுத்து : 'பிரித்து எழுதுதல்','சேர்த்து எழுதுதல்' பகுதியிலிருந்து 5 முதல் 7 கேள்விகள் கட்டாயம் கேட்கப்படும். சொற்களைச் சரியாகப் பிரிப்பதற்கும், சேர்ப்பதற்கும் புணர்ச்சி விதிகள் மற்றும் வல்லினம் மிகும் / மிகா இடங்கள் ஓரளவிற்குத் தெரிந்திருப்பது அவசியம்.

தமிழ் இலக்கணத்தில், எழுத்திலக்கணத்தின் மிக முக்கியமான பிரிவான புணர்ச்சி விதிகளை எளிய முறையில் விளக்கும் பாடக்குறிப்பு இது. 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிப் பாடப் புத்தகங்களின் அடிப்படையில், நன்னூல் சூத்திரங்கள், நிலைமொழி-வருமொழி புணர்ச்சி மாற்றங்கள், இயல்பு மற்றும் விகாரப் புணர்ச்சியின் வகைகள் (தோன்றல், திரிதல், கெடுதல்), பண்புப்பெயர்ப் புணர்ச்சி விதிகள் ஆகியவை தெளிவான சான்றுகளுடன் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. TNPSC Group 4, Group 2/2A, TET மற்றும் VAO தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்கள் எளிதில் நினைவில் கொள்ளும் வகையில் இப்பாடக்குறிப்பும், பயிற்சிக்காக முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ) & மாதிரித் தேர்வும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ் இலக்கணத்தின் முதற்பிரிவான எழுத்திலக்கணத்தைப் பன்னிரண்டு வகையாகப் பிரித்து அவற்றை 5 இயல்களில் நன்னூல் விளக்குகிறது. நன்னூல்படி, எழுத்தியலில் குறிப்பிடப்படும் பன்னிரு கூறுகளில் ஒன்றான புணர்ப்பு (புணர்ச்சி) பற்றி விளக்கப்பட்டு்ள்ளது. 

📜பாடத்தலைப்புகள் (click here) (toc)

🎯 TNPSC முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)

1. பெருமை + களிறு = பெருங்களிறு - இதற்கான புணர்ச்சி விதியைத் தேர்ந்தெடு:
(A) ஈறு போதல், இடையுகரம் இய்யாதல்
(B) ஈறு போதல், அடியகரம் ஐயாதல்
(C) ஈறு போதல், இனமிகல்
(D) தன்னொற்றிரட்டல், முன்னின்ற மெய் திரிதல்
(E) விடை தெரியவில்லை
விடையைக் காண இங்கே அழுத்தவும் / Show Answer
சரியான விடை: (C) ஈறு போதல், இனமிகல்
பெருமை + களிறு என்பதனில், 'ஈறு போதல்' என்ற விதிப்படி 'மை' விகுதி கெட்டு 'பெரு + களிறு' என நின்றது. பின்னர், 'இனமிகல்' என்ற விதிப்படி 'க்' என்ற வல்லின எழுத்திற்கு இனமான 'ங்' என்ற மெல்லின ஒற்றெழுத்து மிகுந்து பெருங்களிறு எனப் புணர்ந்தது.
2. பின்வருவனவற்றுள் பண்புப்பெயர்ப் புணர்ச்சியைக் குறிக்காத விதி எது?
(A) தன்னொற்றிரட்டல்
(B) அடியகரம் ஐயாதல்
(C) மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்
(D) ஆதி நீடல்
(E) விடை தெரியவில்லை
விடையைக் காண இங்கே அழுத்தவும் / Show Answer
சரியான விடை: (C) மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்
'மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்' என்பது மகர ஈற்றுப் புணர்ச்சிக்குரிய விதியாகும். 'தன்னொற்றிரட்டல்', 'அடியகரம் ஐயாதல்', 'ஆதி நீடல்' ஆகியவை நன்னூல் குறிப்பிடும் பண்புப்பெயர்ப் புணர்ச்சி ("ஈறு போதல் இடையுகரம் இய்யாதல்...") விதிகளுள் அடங்கும்.

புணர்ச்சி பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.

அடிப்படைத் தமிழ் இலக்கணம் எழுத்திலக்கணம்


புணர்ச்சி என்றால் என்ன?

  • நிலைமொழியின் ஈறும் வருமொழியின் முதலும் சேருவது புணர்ச்சி ஆகும்.

புணர்ச்சி என்பது இரண்டு சொற்களுக்கு இடையில் நிகழ்வது. இரண்டுக்கு மேற்பட்ட சொற்களாக இருந்தாலும் நிலைமொழி, வருமொழி - வருமொழி, நிலைமொழியாகி நிற்கும். எனவே, இருமொழிகளுக்கு இடையே நிகழ்வது தான் புணர்ச்சி.

  • ஒரு சொல்லோடு ஒட்டுகளோ, இன்னொரு சொல்லோ இணையலாம்.
  • அவ்வாறு இணையும்போது ஒலி நிலையில் மாற்றங்கள் நிகழ்வதுண்டு;
  • மாற்றம் இல்லாமலும் சேர்வதுண்டு.

நிலைமொழி - வருமொழி

நிலைமொழி என்றால் என்ன?

இணையும் இரு சொற்களில் முதல் சொல் நிலைமொழி.

வருமொழி என்றால் என்ன?

இணையும் இரு சொற்களில் இரண்டாவது சொல் வருமொழி.

புணர்ச்சி எடுத்துக்காட்டு நிலைமொழி வருமொழி
கலை + அழகு கலை
அழகு
  • கலை என்னும் சொல் நிலைமொழி.
  • அதனை அடுத்து வரும் அழகு என்னும்சொல் வருமொழி.

புணர்ச்சி எத்தனை வகைப்படும்?

புணர்ச்சியில் நிலைமொழியும் வருமொழியும் அடையும் மாற்றங்களின் அடிப்படையில் புணர்ச்சியை இருவகைப் படுத்தலாம்.

புணர்ச்சி வகைகள் எத்தனை?

இருவகைப்படும்.அவை,

  1. இயல்பு புணர்ச்சி
  2. விகாரப் புணர்ச்சி

இயல்பு புணர்ச்சி

புணர்ச்சியின்போது மாற்றங்கள் எதுவுமின்றி இயல்பாகப் புணர்வது இயல்பு புணர்ச்சி எனப்படும்.

  • வாழை + மரம் = வாழைமரம்
  • செடி + கொடி = செடிகொடி
  • மண் + மலை = மண்மலை

இவற்றில் இருசொற்களும் இயல்பாகப் புணர்கின்றன. அதனால், இதனை இயல்புப் புணர்ச்சி என்பர்.

விகாரப் புணர்ச்சி

புணர்ச்சியின்போது ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தால் அது விகாரப் புணர்ச்சி எனப்படும்.

விகாரப் புணர்ச்சி வகைகள்

இந்த மாற்றம் மூன்று வகைப்படும். அவை:

  1. தோன்றல்
  2. திரிதல்
  3. கெடுதல்

திரிதல் விகாரம் என்றால் என்ன? 

திரிதல் என்பதன் பொருள் - வேறு எழுத்தாக மாற்றமடைதல்.

  •  பல் + பசை = பற்பசை    
  • பல் , பசை ஆகிய சொற்கள் இரண்டும் இணையும்போது ல் - ற் ஆகத்  திரிந்து மாற்றமடைதல்.
விகாரப் புணர்ச்சி வகைகள் எடுத்துக்காட்டு
விளக்கம்
தோன்றல் விகாரம்
நுழைவு + தேர்வு = நுழைவுத்தேர்வு நுழைவு , தேர்வு ஆகிய சொற்கள் இரண்டும் இணையும்போது த் தோன்றுகின்றது.
மா + பழம் = மாம்பழம்
திரிதல் விகாரம்
பல் + பசை = பற்பசை பல் , பசை ஆகிய சொற்கள் இரண்டும் இணையும்போது ல் - ற் ஆகத்  திரிகின்றது.
கெடுதல் விகாரம் புறம் + நானூறு = புறநானூறு புறம் , நானூறு ஆகிய சொற்கள் இரண்டும் இணையும்போது ம் கெடுகின்றது.


பிரித்து எழுதுதல் விதிகளும் சான்றுகளும் (6th - 10th) | TNPSC Group 4 Tamil Grammar Rules

புணர்ச்சி விளக்கம்

நிலைமொழி

புணர்ச்சியில் நிலைமொழியின் இறுதி எழுத்தைப் பொறுத்து

  1. உயிரீறு,
  2. மெய்யீறு
எனவும்,

வருமொழி

வருமொழியின் முதல் எழுத்தைப் பொறுத்து
  1. உயிர்முதல்,
  2. மெய்ம்முதல்
எனவும் பிரிக்கலாம்.

எழுத்து புணர்ச்சி

எழுத்து வகையால் சொற்கள் நான்கு வகைப்படும்.

எழுத்தைப் பொறுத்து புணர்ச்சி வகைகள் எடுத்துக்காட்டு
நிலைமொழியின் இறுதி உயிரீறு எடுத்துக்காட்டு கலை(ல்+ஐ) + அழகு
மெய்யீறு எடுத்துக்காட்டு
மண் + குடம்
வருமொழியின் முதல் உயிர்முதல் வாழை + இலை
மெய்ம்முதல் வாழை + (ம்+அ)மரம்

 

மேலும் இப்புணர்ச்சியை நிலைமொழி இறுதி எழுத்து, வருமொழி முதல் எழுத்து அடிப்படையில் நான்காகப் பிரிக்கலாம்.

எழுத்தைப் பொறுத்து புணர்ச்சி வகைகள் எடுத்துக்காட்டு
நிலைமொழியின் இறுதி உயிர்முன் உயிர் எடுத்துக்காட்டு
மணி (ண்+இ) + அடி = மணியடி
மெய்ம்முன் உயிர் எடுத்துக்காட்டு
பனி(ன்+இ) + (க்+ஆ) காற்று = பனிக்காற்று
வருமொழியின் முதல் உயிர்முன் மெய் எடுத்துக்காட்டு
ஆல் + இலை = ஆவிலை
மெய்ம்முன் மெய் எடுத்துக்காட்டு
மரம் + (க்+இ) கிளை = மரக்கிளை

உயிரீற்றுப் புணர்ச்சி விதிகள் 

உயிரீறு என்றால் என்ன?

நிலைமொழி, உயிர் எழுத்துகளை(அ,ஆ,இ,........) ஈறாக உடைய சொற்கள்.

  • இணையும் இரு சொற்களில் முதல் சொல் நிலைமொழி. நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர்மெய்யாக(ணி,தீ,ல,பா,....) இருந்தால்,உயிரீறு ஆகும்.

உயிரீறு சொற்கள் எடுத்துக்காட்டு

  • தீ (த்+ஈ) 
  • ஓடை (ட்+ஐ) 
  • பல (ல்+அ)
  • பா (ப்+ஆ)
உயிரீறு  எடுத்துக்காட்டு நிலைமொழி உயிரீறு
ஈ + பறந்தது ஈ உயிர் ஈறு வெளிப்படையாகத் தெரிந்தது
மணி +  அழகு மணி
உயிர்மெய் ஈறு (ண்+இ) எனப் பிரிந்து  உயிர் ஈறு மறைந்துத் தெரிந்தது.

விதி : உடம்படுமெய் புணர்ச்சி விதிகள் - உயிர்முன் உயிர்

"இஈ ஐவழி யவ்வும் ஏனை
உயிர்வழி வவ்வும் ஏமுன்இவ் விருமையும்
உயிர்வரின் உடம்படு மெய்யென் றாகும்" - - நன்னூல் 162


உடம்படுமெய் என்றால் என்ன ?

உயிரை ஈறாக உடைய சொற்களின்முன் உயிரை முதலாக உடைய சொற்கள் வந்து சேரும்;

  • அப்போது சொற்கள் சேராமல் தனித்து நிற்கும்;
  • ஒன்று சேராத உயிரொலிகளை ஒன்று சேர்ப்பதற்கு அங்கு ஒரு மெய் தோன்றும்.

இதனை உடம்படுமெய் என்று சொல்வர்.

நிலைமொழி ஈறும், வருமொழி முதலும் உயிர் எழுத்துகளாக இருப்பின் அவ்விரு சொற்களும் புணர்ச்சியில் விட்டிசைக்கும். சேர்ந்திசைக்க வேண்டி, உடம்படாத அவ்விரண்டும் உடம்படுதற் பொருட்டு இடையே யகரமும், வகரமும் உடம்படு மெய்களாக வரும். 

நிலைமொழியீறு, 

  • இகர, ஈகார, ஐகாரமாயின் யகர உடம்படு மெய்யும், 
  • ஏனைய உயிர்களாயின் வகர உடம்படுமெய்யும், 
  • ஏகாரமாயின் யகரம், வகரம் ஆகிய இரு உடம்படு மெய்களும் வரும்.

இஈ ஐவழி யவ்வும் - இ, ஈ, ஐ - கார வீற்றுச் சிறப்புவிதி

நிலைமொழியின் ஈற்றில் 'இ, ஈ, ஐ' என்னும் உயிரெழுத்துகளை ஈறாக உடைய சொற்கள் நிற்கும். அவற்றின் முன், வருமொழியில் பன்னிரண்டு உயிர்களையும் முதலாவதாக உடைய சொற்கள் சேரும். அந்நிலையில் 'யகரம்' உடம்படுமெய்யாக வரும்.

இ - கார வீற்று மணி (ண்+இ) + அழகு = மணி + ய் + அழகு = மணியழகு
ஈ - கார வீற்று தீ (த்+ஈ) + எரி = தீ + ய் + எரி = தீயெரி
ஐ - கார வீற்று ஓடை (ட்+ஐ) + ஓரம் = ஓடை + ய் + ஓரம் = ஓடையோரம்

உயிர்வழி வவ்வும் - அ, ஆ - கார வீற்றுச் சிறப்புவிதி

'இ, ஈ, ஐ' தவிர, பிற உயிரெழுத்துகள் நிலைமொழி ஈறாக வரும்போது அவற்றின்முன் வருமொழியில் பன்னிரண்டு உயிர்களும் வந்து புணர்கையில் 'வகர' மெய் தோன்றும்.

அ - கார வீற்று பல(ல்+அ) )+ உயிர் = பல + வ் + உயிர் = பலவுயிர்
ஆ - கார வீற்று பா(ப்+ஆ) + இனம் = பா + வ் + இனம் = பாவினம்

ஏமுன்இவ் விருமையும் - ஏகார வீற்றுச் சிறப்புவிதி

நிலைமொழி ஈறாக ஏகாரம் வந்து, வருமொழியில் பன்னிரண்டு உயிரெழுத்துகளையும் உடைய சொற்கள் வந்து புணர்கையில் 'யகரமோ வகரமோ' தோன்றும்.

ஏகார வீற்று யகரம்
சே(ச்+ஏ) + அடி = சே + ய் + அடி = சேயடி;
ஏகார வீற்று வகரம் சே+ வ் + அடி = சேவடி
ஏகார வீற்று வகரம் தே(த்+ஏ) + ஆரம் = தே + வ் + ஆரம் = தேவாரம்
ஏகார வீற்று யகரம் இவனே(ன்+ஏ) + அவன் = இவனே +ய் + அவன் = இவனேயவன்

குற்றியலுகரப் புணர்ச்சி விதிகள்

குற்றியலுகரம்

தனிக்குறில் அல்லாது, சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்கள் ஏறிய உகரம் (கு, சு, டு, து, பு, று) தன் ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரை அளவாகக் ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும். 

சொல்லின் இறுதியில் நிற்கும் உகரத்தின் முந்தைய எழுத்தைப் பொறுத்துக் குற்றியலுகரம் ஆறு வகைப்படும்.

வல்லினம்- க், ச், ட், த், ப், ற்

மெல்லினம் - ங், ஞ், ண், ந், ம், ன்

இடையினம் -  ய், ர், ல், வ், ழ், ள்

எடுத்துக்காட்டு குற்றியலுகரம் வகைகள்
நாக்கு, வகுப்பு வன்தொடர்க் குற்றியலுகரம்
நெஞ்சு, இரும்பு மென்தொடர்க் குற்றியலுகரம்
மார்பு, அமிழ்து இடைத்தொடர்க் குற்றியலுகரம்
முதுகு, வரலாறு உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
எஃகு, அஃது
ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
காது, பேசு நெடில்தொடர்க் குற்றியலுகரம்

விதி 1 :

உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்
யவ்வரின் இய்யாம் முற்றுமற் றொரோவழி - நன்னூல் 164


உக்குறள் - குறுகிய உகரம் (குற்றியலுகரம்);

யவ்வரின் - யகரம் வரின்; 

இய்யாம் - இகரமாகும்;

முற்றும் - முற்றுகரமும்;

அற்று - குற்றுகரம் போல மெய்விட்டோடும்; 

ஒரோ வழி - சில இடங்களில்

உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்

நிலைமொழியாக வரும் குற்றியலுகரத்தின் முன்(வருமொழியின் முதலில்) உயிரெழுத்துகள் வந்தால், நிலைமொழியிலுள்ள உகரம் கெடும். வருமொழியிலுள்ள உயிரெழுத்து நின்ற மெய்யுடன் இணையும்.

வட்டு + ஆடினான் = வட்டாடினான்
  • = வட்(ட்+உ ) + ஆடினான்
  • = வட்ட் + ஆடினான் (உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும் என்னும் விதிப்படி உ நீங்கியது.)
  • = வட்டாடினான் - (உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே - ட் + ஆ=டா)

உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே

உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி,

வட்டு + ஆடினான் = வட்டாடினான்

  • = வட்(ட்+உ ) + ஆடினான்
  • = வட்ட் + ஆடினான் (உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும் என்னும் விதிப்படி உ நீங்கியது.)
  • = வட்டா(ட் + ஆ)டினான் என நிலைமொழி இறுதிமெய், வருமொழியின் முதல் எழுத்தாகிய உயிரோடு இணைந்து புணர்ந்தது.
  • வருமொழியிலுள்ள உயிரெழுத்து நின்ற மெய்யுடன் இணையும் - வட்டாடினான்

யவ்வரின் இய்யாம் - குற்றியலிகரப் புணர்ச்சி

நிலைமொழியின் ஈறு குற்றியலுகரமாக இருந்து, வருமொழியின் முதல் எழுத்து, ய கரமாக இருந்து புணரும்போது, உகரம் இகரமாகத் திரியும். இதனைக் குற்றியலிகரப் புணர்ச்சி என்பர்.

குரங்கு + யாது = குரங் ( க் +உ ) + யாது = குரங்கி(க்+இ)யாது = குரங்கியாது.

முற்றுமற் றொரோவழி - முற்றியலுகரப் புணர்ச்சி

குற்றியலுகரத்தைப் போலவே சில முற்றியலுகரங்களுக்கும் இவ்விரு விதிகளும்(உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்,உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே) பொருந்தும்.

  • உறவு + அழகு = உற(வ் +உ) = உறவ் + அழகு = உறவழகு
  • உயர்வு + அடைந்தார் =உயர்வு (வ் + உ) + அடைந்தார் = உயர்வடைந்தார்

விதி 2 :

நெடிலோ டுயிர்த் தொடர்க்குற் றுகரங்களுள்
டறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே - நன்னூல் 183


நெடிலோ டுயிர்த் தொடர்க்குற் றுகரங்களுள்-  நெடில்தொடர்க் குற்றியலுகரம்

டகரம் ( ட் ), ஊர்ந்துவரும் நெடில்தொடர்க் குற்றியலுகரம், வருமொழியோடு இணையும்போது, அவை ஊர்ந்துவரும் ஒற்று இரட்டித்துப் புணரும்.

காடு + கோழி = காட் (ட்+உ) + கோழி = காட்டுக்கோழி

உயிர்த் தொடர்க்குற் றுகரங்களுள்- உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

றகரம் ( ற்), ஊர்ந்து வரும் உயிர்த்தொடர்க் குற்றியலுகரம், வருமொழியோடு இணையும்போது, அவை ஊர்ந்துவரும் ஒற்று இரட்டித்துப் புணரும்.

  • ஆறு + பாலம் = ஆற் (ற்+உ) + பாலம் = ஆற்றுப்பாலம்
  • கிணறு + தவளை = கிணற் (ற் +உ) + தவளை = கிணற்றுத்தவளை

விதி 3 :

வன்றொடர் அல்லன முன்மிகா அல்வழி - நன்னூல் 181


வன்றொடர் அல்லன முன்மிகா அல்வழி- வல்லினத்தொடர்க் குற்றியலுகரம்

வல்லினத்தொடர்க் குற்றியலுகரம் தவிர, ஏனைய குற்றியலுகரங்களின்முன்(அதாவது தொடர்ச்சியாக) வரும் வல்லின மெய்யெழுத்துகள் (க், ச், த், ப்), அல்வழிப் புணர்ச்சியில் மிகாது.

அதாவது, நிலைமொழியின் இறுதியில் உள்ள குற்றியலுகரம் வன்றொடராக இல்லாமல் (மென்றொடர், இடைத்தொடர், உயிர்த்தொடர், ஆய்தத்தொடர்,நெடில்தொடர், வன்தொடர் அல்லாத பிற) இருந்தால், வருமொழியின் முதல் எழுத்து வல்லினமாக இருந்தாலும் அங்கே ஒற்று (மிகா) மிகாமல் இயல்பாகவே புணரும். 

📌 அல்வழிப் புணர்ச்சி - ஓர் அறிமுகம்

'அல்வழிப் புணர்ச்சி' என்பது வேற்றுமை உருபுகள் அல்லாத பிற இடங்களில் சொற்கள் இணைந்து புணர்வதைக் குறிக்கும். அதாவது, எழுவாய் தொடர், விளித் தொடர், பெயரெச்சம், வினைமுற்று, இடைச்சொல், உரிச்சொல் மற்றும் அஃறிணைப் பெயர்கள் தொடரும் இடங்களில் நிகழும் புணர்ச்சிகள் அனைத்தும் அல்வழிப் புணர்ச்சியில் அடங்கும்.

✨ TNPSC தேர்வு நோக்கில் முக்கியம்:

அல்வழிப் புணர்ச்சியில் வல்லின மெய்யெழுத்துகள் எங்கு மிகும், எங்கு மிகாது (மிகா) என்பதை நன்னூல் விதிகள் மூலமாகத் தேர்வர்கள் தெளிவாகப் புரிந்துகொள்வது 'பிரித்து எழுதுக' மற்றும் இலக்கணக் கேள்விகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • நாகு + கடிது = நாகு கடிது - நெடில்தொடர்
  • எஃகு + சிறிது = எஃகு சிறிது - ஆய்தத்தொடர்
  • வரகு + தீது = வரகு தீது - உயிர்த்தொடர்
  • குரங்கு + பெரிது = குரங்கு பெரிது - மென்றொடர்
  • தெள்கு + சிறிது = தெள்கு சிறிது - இடைத்தொடர்

💡 TNPSC முக்கிய குறிப்பு (Shortcut):

வன்றொடர்க் குற்றியலுகரம் வந்தால் மட்டுமே வல்லினம் மிகும் (எ.கா: கச்சு + குடம் = கச்சுக் குடம்).. மற்ற குற்றியலுகரங்கள் (மென், இடை, உயிர், ஆய்தம், நெடில்) வந்தால் வல்லினம் மிகாது (இயல்பாக நிற்கும்).

விதி 4 :

இடைத்தொடர் ஆய்தத் தொடரொற் றிடையின்
மிகாநெடில் உயிர்த்தொடர் முன்மிகா வேற்றுமை - நன்னூல் 182


வேற்றுமைப் புணர்ச்சி 

வேற்றுமைப் புணர்ச்சியில், இடைத்தொடர் முன்னும், ஆய்தத்தொடர் முன்னும், ஒற்று இடையே மிகாத நெடிற்றொடர் முன்னும், உயிர்த்தொடர் முன்னும் வரும் வல்லினம் மிகாது.

📌 வேற்றுமைப் புணர்ச்சி - ஓர் அறிமுகம்

தமிழ் இலக்கணத்தில் சொற்கள் புணரும் முறைகள் அல்வழிப் புணர்ச்சி மற்றும் வேற்றுமைப் புணர்ச்சி என இரு வகைப்படும். அவற்றுள், இரண்டு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபுகள் (ஐ, ஆல், கு, இன், அது, கண்) மறைந்து நின்று பொருள் தருவது 'வேற்றுமைப் புணர்ச்சி' எனப்படும். நிலைமொழியும் வருமொழியும் வேற்றுமைப் பொருளில் இணைந்து புணரும்போது பல இலக்கண விதிகள் செயல்படுகின்றன.

✨ TNPSC தேர்வு நோக்கில் முக்கியம்:

வேற்றுமைப் புணர்ச்சியில் குற்றியலுகரச் சொற்கள் இணையும்போது வல்லின மெய்யெழுத்துகள் எங்கு மிகும் மற்றும் எங்கு மிகாது (மிகா) என்பதை நன்னூல் சூத்திரங்கள் வாயிலாகத் தெரிந்து கொள்வது தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற உதவும்.

⚖️ ஒப்பீட்டு அட்டவணை: அல்வழிப் புணர்ச்சி vs வேற்றுமைப் புணர்ச்சி

TNPSC தமிழ் இலக்கணத் தயாரிப்பு குறிப்பு

அம்சங்கள் அல்வழிப் புணர்ச்சி வேற்றுமைப் புணர்ச்சி
பொருள் / விளக்கம் வேற்றுமை உருபுகள் அல்லாத பிற தொடர்கள் (வினை, விளி, பண்பு, உவமை போன்றவை) இணைந்து வருவது. இரண்டு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபுகள் (ஐ, ஆல், கு, இன், அது, கண்) மறைந்து நின்று பொருள் தருவது.
எடுத்துக்காட்டுகள் • நாகு + கடிது = நாகு கடிது
• பொன் + தட்டு = பொற்றட்டு
• நடந்து + வந்தான் = நடந்துவந்தான்
• தெல்கு + கால் = தெல்கு கால்
• மரம் + வேர் = மரவேர் (மரத்தின் வேர்)
• கண் + மை = கண்மை (கண்ணின் கண் மை)
TNPSC முக்கிய குறிப்பு வன்றொடர் அல்லாத பிற குற்றியலுகரங்களின் முன் வல்லினம் மிகாது (நன்னூல் 181). இடை, ஆய்தம், நெடில், உயிர் தொடர்க் குற்றியலுகரங்களின் முன் வல்லினம் மிகாது (நன்னூல் 182).

வேற்றுமைப் புணர்ச்சியில் பின்வரும் குற்றியலுகரங்களின் முன் வரும் வல்லின மெய்யெழுத்துகள் (க், ச், த், ப்) மிகாது (இயல்பாக நிற்கும்):

  • இடைத்தொடர்க் குற்றியலுகரம் முன் - தெள்கு + கால் = தெள்கு கால் (தெள்கு - பேன்)
  • ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் முன் - எஃகு + சிறுமை = எஃகு சிறுமை
  • நெடிற்றொடர் குற்றியலுகரம் (நெடில் தொடர்) முன் - நாகு + தலை = நாகு தலை
  • உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் முன் - வரகு + தீது = வரகு தீது 

💡 TNPSC முக்கிய குறிப்பு (Shortcut):

வன்றொடர் மற்றும் மென்றொடர் அல்லாத பிற குற்றியலுகரங்கள் வேற்றுமைப் புணர்ச்சியில் வரும்போது வல்லினம் மிகாது (இயல்பாக நிற்கும்).

விதி 5 :

மென்றொடர் மொழியுள் சிலவேற் றுமையில்
தம்மின வன்றொட ராகா மன்னே - நன்னூல் 184


 மெல்லினத்தொடர்க் குற்றியலுகரம்

மெல்லினத்தொடர்க் குற்றியலுகரங்களுள் சில வேற்றுமைப் புணர்ச்சியில் தமக்கு இனமான வல்லினத்தொடராய் முடியும்.

  • செம்பு + குடம் = செப்புக்குடம்
  • சுரும்பு + நாண் = சுருப்புநாண்
  • கரும்பு + வில் = கருப்புவில்
  • சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம் 

இயல்பினும் விதியினும் நிற்கும் உயிரீறு 

விதி :

"இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்
கசதப மிகும்வித வாதன மன்னே"- நன்னூல் 165


இயல்பினும்

  • பலா + பழம் = பலாப்பழம்

இதில் நிலைமொழியின் இறுதி எழுத்து இயல்பாக உயிரெழுத்தாக அமைந்துள்ளது. 

விதியினும் 

கானம் + பறவை 

  • = கானம் + பறவை - மகரமெய் அழிந்து
  • = கான + பறவை 
  •  = கான(ன்+அ) + பறவை
  • = கானப்பறவை 

இதில் நிலைமொழி இறுதி மகர ஒற்றாகும். அது வருமொழியோடு புணரும் பொழுது மவ்வீ றொற்றழிந்து என்னும் விதியினால் மகரமெய் அழிந்து, கான + பறவை என்பதில் நிலைமொழி உயிரீறாக மாறுகின்றது. இதுபோல் இயல்பாகவும், விதியினாலும், உயிரீறாக நிற்கும் சொல்முன் வல்லெழுத்தை (க,ச,த,ப) முதலாகவுடைய சொற்கள் வந்து புணரின் அவ்வல்லெழுத்து மிக்குப் புணரும். 

பல சில

விதி 1 :

"பல சில எனுமிவை தம்முன் தாம்வரின்
இயல்பும் மிகலும் அகரம் ஏக
லகரம் றகரம் ஆகலும் பிறவரின்
அகரம் விகற்பம் ஆகலும் உளபிற" - நன்னூல் 170


 பல சில எனுமிவை தம்முன் தாம்வரின் இயல்பும்

பல என்னும் சொல்முன் பல என்னும் சொல்லும் சில என்னும் சொல்முன் சில என்னும் சொல்லும் வந்து புணரும்போது இயல்பாகப் புணரும்.

  •  பல + பல = பலபல 
  • சில + சில = சிலசில 

மிகலும்

பல என்னும் சொல்முன் பல என்னும் சொல்லும் சில என்னும் சொல்முன் சில என்னும் சொல்லும் வந்து புணரும்போது மிக்குப் புணரும்

  • பல + பல = பலப்பல 
  • சில + சில = சிலச்சில

அகரம் ஏக லகரம் றகரம் ஆகலும்

நிலைமொழி இறுதியிலுள்ள அகரம் கெட எஞ்சி நிற்கும் லகரம் றகரமாகத் திரிந்து புணரும். 

  • பல + பல = ப(ல்+அ) + பல = பற்பல
  • சில + சில = சி(ல்+அ) + சில = சிற்சில 

பிறவரின் அகரம் விகற்பம் ஆகலும் உளபிற

 பல, சில என்னும் சொற்கள் முன் பிற சொற்கள் வந்து புணரின் நிலைமொழி இறுதி அகரம் கெட்டும் புணரும்; கெடாமலும் புணரும்.  

  • பல + பணி = பல்பணி 
  • பல + பணி = பலபணி
  • சில + வளை = சில் வளை 
  • சில + வளை = சிலவளை

திசைப்பெயர்ப் புணர்ச்சி விதிகள்

திசைப் பெயர்களோடு வேறு திசைப்பெயர்களோ, பிற சொற்களோ வந்து புணரும்பொழுது நிலைமொழியின் இறுதியில் உள்ள உயிர் மெய்யெழுத்தும், (கு) ககர ஒற்றும் (க்),நீங்கிப் புணரும். அவை நீங்கியபின் நிலைமொழியின் இறுதியில் உள்ள றகரம் (ற்) னகரமாகவோ (ன்) லகரமாகவோ (ல்) திரிந்தும் புணரும்.

முதன்மைத் திசைகள் நான்கு. 

அவை 

  1. கிழக்கு, 
  2. மேற்கு, 
  3. தெற்கு, 
  4. வடக்கு ஆகியன.

திசைப்பெயர்களோடு திசைப்பெயரும், பிறபெயரும் சேர்வது திசைப்பெயர்ப் புணர்ச்சி எனப்படும்.

  • வடக்கு + கிழக்கு =வடகிழக்கு
  • வடக்கு + மேற்கு = வடமேற்கு

வடக்கு என்னும் நிலைமொழி கிழக்கு, மேற்கு என்னும் வருமொழிகளோடு சேரும்போது நிலைமொழியின் இறுதி எழுத்துகளான க், கு நீங்கிப் புணர்ந்தது.

  • தெற்கு + மேற்கு = தென்மேற்கு
  • தெற்கு + கிழக்கு = தென்கிழக்கு

தெற்கு என்னும் திசைப்பெயரோடு மேற்கு, கிழக்கு என்னும் திசைப்பெயர்கள் சேரும்போது, நிலைமொழியின் இறுதியிலுள்ள கு நீங்கும்; பிறகு 'ற'கர மெய் 'ன'கரமாகிப் புணரும்.

விதி : திசைப்பெயரோடு பிற பெயர்களின் புணர்ச்சி

"திசையொடு திசையும் பிறவும் சேரின்
நிலையீற்று உயிர்மெய் கவ்வொற்று நீங்கலும்
றகரம் னலவாத் திரிதலும் ஆம்பிற" - நன்னூல் 186


திசையொடு திசையும்

  • வடக்கு + மலை = வடமலை.

இதில் நிலைமொழியின் இறுதி எழுத்துகளான க், கு ஆகியன இரண்டும் நீங்கிப் புணர்ந்தது.

பிறவும் சேரின்

  • தெற்கு + திசை = தென்திசை.

இதில் நிலைமொழியின் இறுதியாகிய கு நீங்கியது; அதன் அயல் எழுத்தான ற் - ன் ஆக மாறிப் புணர்ந்தது.

நிலையீற்று உயிர்மெய் கவ்வொற்று நீங்கலும்

  • கிழக்கு + நாடு = கீழ்நாடு

இங்கு நிலைமொழியின் இறுதியாகிய க், கு நீங்கி, ழ என்னும் உயிர்மெய்யில் (ழ்+அ) அகரம் நீங்கி, கி என்னும் முதல் எழுத்து 'ஆதி நீடல்' என்னும் விதிப்படி,கீ என நீண்டு, கீழ் + நாடு = கீழ்நாடு எனப் புணர்ந்தது.

றகரம் னலவாத் திரிதலும் ஆம்பிற

  • மேற்கு + நாடு = மேல்நாடு, மேனாடு.

நிலைமொழியில் கு நீங்கியது. அதன் அயலெழுத்தான ற் - ல் ஆக மாறி, மேல்+ நாடு = மேல்நாடு எனவும், ற் - ன் ஆக மாறி, மேல் + நாடு = மேனாடு எனவும் இருவகையில் புணர்ந்தன.

'பூ' என்னும் பெயர் 

விதி : 

'பூ' என்னும் பெயர் முன்னர் வல்லினத்தோடு மெல்லினமும் மிகும்.

"பூப்பெயர் முன்இன மென்மையுந் தோன்றும்" - நன்னூல் 200


பூப்பெயர் முன்இன

பூ என்னும் பெயரின் முன் வல்லின முதன்மொழி வந்து புணருமிடத்து அவ்வல்லெழுத்துக்கு இனமான மெல்லெழுத்து மிக்குப் புணரும்.

  • பூ + கொடி = பூங்கொடி 

வருமொழி முதலில் உள்ள 'க்' என்னும் வல்லின எழுத்துக்கு இனமான 'ங்' என்னும் மெல்லெழுத்து மிக்குப் புணர்ந்தது. 

மென்மையுந் தோன்றும்

மென்மையுந் தோன்றும் என்றதனால் வல்லெழுத்து வருதலும் வழக்கில் உண்டு என்பது பெறப்பட்டது. 

  • பூ + கூடை = பூக்கூடை


TNPSC - General Tamil - Study Material

பண்புப்பெயர்ப் புணர்ச்சி விதிகள் விளக்கம்

நிறம், சுவை, அளவு, வடிவம் ஆகியன குறித்து வரும் சொற்கள் பண்புப் பெயர்களாம். செம்மை, சிறுமை, சேய்மை, நன்மை, இளமை, புதுமை போல்வனவும் இவற்றுக்குரிய எதிர்ச்சொற்களும் இவைபோன்ற பிறவும் மையீற்றுப் பண்புப்பெயர்கள் எனப்படும்.

  • கருமை + விழி = கரு + விழி = கருவிழி

விதி : 

ஈறு போதல் இடையுகரம் இய்யாதல்
ஆதி நீடல் அடியகரம் ஐயாதல்
தன்னொற் றிரட்டல் முன்னின்ற மெய்திரிதல்
இனமிகல் இனையவும் பண்பிற் கியல்பே - நன்னூல் 136


ஈறுபோதல்

'ஈறுபோதல்' என்னும் விதியாவது, நிலைமொழியின் இறுதி எழுத்து நீங்கிப் புணர்வது.

கருமை + விழி = கருவிழி

  • கருமை + விழி - (ஈறுபோதல் - மை நீங்கல் )
  • = கரு + விழி
  • = கருவிழி

ஈறுபோதல் என்னும் விதிப்படி நிலைமொழியின் இறுதி எழுத்து மை நீங்கிப் புணர்ந்தது.

இடையுகரம் இய்யாதல்

'இடைஉகரம் இஆதல்' எனும் விதியாவது, இடையில் உள்ள உகரம், இகரமாக புணர்வது.

பெருமை + அன் = பெரியன்

  • பெருமை + அன் - (ஈறுபோதல் - மை நீங்கல்)
  • = பெரு(ர்+உ) + அன் - (இடைஉகரம் இஆதல்- உ = இ)
  • = பெரி(ர்+இ) + அன் - ('ய'கர உடம்படுமெய் பெற்றுப் - பெரி + ய்)
  • = பெரி+ய்+அன் - (உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே - ய்+அ=ய)
  • பெரி+(ய்+அ)ன் = பெரியன்

ஈறு போதல் என்னும் விதிப்படி நிலைமொழியின் இறுதி எழுத்து, மை நீங்கிப் பின், பெரு என்பதன் இறுதி உகரம் 'இடைஉகரம் இஆதல்' எனும் விதிப்படி பெரி யாகிப் பின் 'ய'கர உடம்படுமெய் பெற்றுப் பெரி + ய் + அன் என்பது 'உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே' என்னும் விதிப்படி, ய் - ய என்றாகிப் பெரியன் எனப் புணர்ந்தது.

ஆதி நீடல்

ஆதி நீடல் என்னும் விதியாவது, முதல் எழுத்து நீண்டு புணர்வது.

பசுமை + இலை = பாசிலை

  • பசுமை + இலை - (ஈறுபோதல் - மை நீங்கல்)
  • = பசு + இலை - (ஆதி நீடல் - ப = பா)
  • = பாசு(ச்+உ) + இலை - (உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் - உ )
  • = பாச்+இலை - (உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே - ச்+இ=சி)
  • = பாசி(ச்+இ)லை
  • = பாசிலை

நிலைமொழி ஈறுகெட்டு மை நீங்கிப் பின், 'ஆதி நீடல்' என்னும் விதிப்படி, பாசு + இலை என்றாகியது. 'உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்' என்னும் விதிப்படி, பாச் + இலை என்றாகிப் பின், 'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே' என்னும் விதிப்படி பாசிலை எனப் புணர்ந்தது.

  • பசுமை + இலை = பாசிலை (பசுமையான இலை).
  • பசுமை + இலை = பச்சிலை (பச்சை நிற இலை / மூலிகை)

அடியகரம் ஐயாதல்

அடிஅகரம் ஐ ஆதல் என்னும் விதியாவது, முதல் எழுத்து அகரமாக இருப்பின் ஐ ஆக மாறுதல்.

பசுமை + கூழ் = பைங்கூழ்

  • பசுமை + கூழ் - (ஈறுபோதல் - மை நீங்கல்)
  • = பசு + கூழ் - (அடிஅகரம் ஐ ஆதல்- ப - பை)
  • = பைசு + கூழ் - (இனையவும் - சு நீங்கல்)
  • = பை + கூழ் - (இனமிகல் - க் - ங்)
  • = பைங்கூழ்

'ஈறுபோதல்' என்னும் விதிப்படி மை நீங்கியது. (பசு + கூழ்) 'அடிஅகரம் ஐ ஆதல்' எனும் விதிப்படி ப - பை ஆனது. ‘இனையவும்' என்னும் விதிப்படி உயிர்மெய் (சு) கெட்டது. ‘இனமிகல்' என்னும் விதிப்படி வருமொழியின் முதல் எழுத்தான க் எழுத்துக்கு இனமான ங் மிகுந்து பைங்கூழ் எனப் புணர்ந்தது.

தன்னொற் றிரட்டல்

தன்னொற்று இரட்டல் என்னும் விதியாவது, நிலைமொழியில் தனிக் குற்றெழுத்தின் முன் மெய்வந்து, வருமொழி முதலில் உயிர்வரின் முதலில் நிலைமொழி இறுதி மெய் இரட்டும்.

சிறுமை + ஓடை = சிற்றோடை

  • சிறுமை + ஓடை - (ஈறுபோதல் - மை நீங்கல்)
  • = சிறு + ஓடை - (தன்னொற்று இரட்டல் - (சிறு - சிற்று ))
  • = சிற்று(ற்+உ) + ஓடை - (உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும் - உ நீங்கல்)
  • = சிற்ற் + ஓடை - (உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே - (ற்+ஓ) நீங்கல்)
  • = சிற்றோடை

'ஈறுபோதல்' என்னும் விதிப்படி மை கெட்டது. 'தன்னொற்று இரட்டல்' என்னும் விதிப்படி பகுதியாகிய சிறு என்பதன் றகரம் இரட்டித்துச் சிற்று என ஆகியது. பின் 'உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்' என்னும் விதிப்படி, உகரம் கெட்டு, சிற்ற் என்றாகியது. பின்னர் 'உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே' என்னும் விதிப்படி வருமொழி உயிர் ஏறிப் புணர்ந்து சிற்றோடை என்றாயிற்று.

முன்னின்ற மெய்திரிதல்

முன்னின்ற மெய் திரிதல் என்னும் விதியாவது, மெய் எழுத்து மற்றொரு மெய் ஆகத் திரிதல்.

செம்மை + ஆம்பல் = சேதாம்பல்

  • செம்மை + ஆம்பல் - (ஈறுபோதல் - மை நீங்கல்)
  • = செம் + ஆம்பல் - (ஆதி நீடல்- (செ - சே))
  • = சேம் + ஆம்பல் - (முன்னின்ற மெய் திரிதல்- (ம - த))
  • = சே(த் + ஆ)ம்பல் - (உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே- (த்+ஆ = தா))
  • = சேதாம்பல்

'ஈறுபோதல்' விதிப்படி, மை கெட்டு, 'ஆதி நீடல்' விதிப்படி சேம் + ஆம்பல் ஆயிற்று, பின் 'முன்னின்ற மெய் திரிதல்’ என்னும் விதிப்படி மகரமெய் தகரமெய் ஆகத் திரிந்து சேத் + ஆம்பல் என்றாகி, 'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே' என்னும் விதிப்படி சேதாம்பல் என்றாயிற்று.

இனையவும்

இனையவும் என்னும் விதியாவது, உயிர்மெய் கெடுவது.

பசுமை + கூழ் = பைங்கூழ்

  • பசுமை + கூழ் - (ஈறுபோதல் - மை நீங்கல்)
  • = பசு + கூழ் - (அடிஅகரம் ஐ ஆதல்- ப - பை)
  • = பைசு + கூழ் - (இனையவும் - சு நீங்கல்)
  • = பை + கூழ் - (இனமிகல் - க் - ங்)
  • = பைங்கூழ்

இனமிகல்

இனமிகல் என்னும் விதியாவது, வருமொழியின் முதல் எழுத்து, தனது இன எழுத்துடன் மிகுந்து புணர்வது.

பசுமை + கூழ் = பைங்கூழ்

  • பசுமை + கூழ் - (ஈறுபோதல் - மை நீங்கல்)
  • = பசு + கூழ் - (அடிஅகரம் ஐ ஆதல்- ப - பை)
  • = பைசு + கூழ் - (இனையவும் - சு நீங்கல்)
  • = பை + கூழ் - (இனமிகல் - க் - ங்)
  • = பைங்கூழ்

பண்புப்பெயர்ப் புணர்ச்சி எடுத்துக்காட்டு

கருமை + குயில் = கருங்குயில்

  • = கருமை + குயில் - (ஈறுபோதல் - மை நீங்கல்)
  • = கரு + குயில் - (இனமிகல் - கு - ங்)
  • = கருங் + குயில்
  • = கருங்குயில்

ஈறுபோதல் விதிப்படி மை கெட்டது. 'இனமிகல்' என்னும் விதிப்படி வருமொழி ககரத்திற்கு ( கு ) இனமான மெல்லெழுத்து ங் மிகுந்து, கருங்குயில் எனப் புணர்ந்தது.;

மெய்யீற்றுப் புணர்ச்சி விதிகள் - மெய்ம்முன் உயிர் - மெய்யீற்றின்முன் உயிர்

மெய்யீறு என்றால் என்ன?

 நிலைமொழி இறுதி மெய் எழுத்துகளாக(க்,ங்,ச்,....) உள்ள சொற்கள்.

  • இணையும் இரு சொற்களில் முதல் சொல் நிலைமொழி. நிலைமொழியின் இறுதி எழுத்து மெய்யாக(ண்,ழ்,ல்,ம்,ன்....) இருந்தால்,மெய்யீறு ஆகும்.

மெய்யீறு சொற்கள் எடுத்துக்காட்டு

  • தமிழ் 
  • மரம் 
  • வட்டம் 
  • மண் 
  • பொன் 
  • கல்
மெய்யீறு  எடுத்துக்காட்டு நிலைமொழி மெய்யீறு
தமிழ் + அன்னை தமிழ்
ழ் - மெய்யீறு வெளிப்படையாகத் தெரிந்தது

விதி : உடல்மேல் உயிர்வந் தொன்றுவ தியல்பே

“உடல்மேல் உயிர்வந் தொன்றுவ தியல்பே"- நன்னூல் 204

நிலைமொழி இறுதி மெய், வருமொழியின் முதல் எழுத்தாகிய உயிரோடு இணைந்து புணரும்போது, வருமொழியிலுள்ள உயிரெழுத்து நின்ற மெய்யுடன் இணையும்.

  • தமிழ் + அன்னை = தமி (ழ் +அ) ன்னை = தமிழன்னை 

விதி : தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்

நிலைமொழியில் தனிக் குற்றெழுத்தின் முன் மெய்வந்து, வருமொழி முதலில் உயிர்வரின் முதலில் நிலைமொழி இறுதி மெய் இரட்டும்.

"தனிக்குறில் முன்னொற் றுயிர்வரி னிரட்டும்" - நன்னூல் 205

எம்+உயிர் = எம்முயிர்

  • எம்+உயிர்
  • = எம்ம் + உயிர் - (தன்னொற்று இரட்டல் - (எம்- எம்ம்))
  • = எம்(ம் + உ)யிர் - (உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே)
  • = எம்முயிர்

நிலைமொழியில் தனிக்குறில் முன் மெய்வரின் "தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்" பகுதியாகிய  எம்ம் என்பதன் மகரம் இரட்டித்துச்  எம்ம் என ஆகியது. பின்னர் "உடல்மேல் உயிர்வந் தொன்றுவ தியல்பே" என்னும் விதிப்படி எம் (ம்+உ)யிர் = எம்முயிர் என்று புணரும்.

விதி : மகரஈற்றுப் புணர்ச்சி விதிகள்

"மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்
வன்மைக்கு இனமாய்த் திரிபவும் ஆகும்"- நன்னூல் 219


மவ்வீறு ஒற்றழிந்து

மகர ஈற்றுச் சொற்கள் வருமொழியோடு சேரும்பொழுது, இறுதி மகரம் (ம்) கெட்டு, உயிரீறுபோல நின்று, உயிர்முதல் மொழியோடு உடம்படுமெய் புணரும்.

மரம் + அடி = மரவடி

  • = மர + அடி - (மகரம் (ம்) கெட்டு)
  • = மர + வ் + அடி - (உயிர்முதல் மொழியோடு உடம்படுமெய்)
  • = மரவடி 

வன்மைக்கு இனமாய்

நிலைமொழியின் மகர ஈறுகெட்டு வருமொழி முதலில் உள்ள வல்லின எழுத்து மிக்குப் புணரும்.

வட்டம் + கல் = வட்டக்கல்

  • = வட்ட + கல் - (மகரம் (ம்) கெட்டு)
  • = வட்டக் + கல் - (வருமொழி முதலில் உள்ள வல்லின எழுத்து (க்) மிகுதல்)
  • = வட்டக்கல்

திரிபவும் - மெல்லினமாகத் திரிந்து புணரும்

நிலைமொழியின் மகரஈறு வருமொழி முதலிலுள்ள வல்லினத்திற்கு இனமான மெல்லினமாகத் திரிந்து புணரும்.

நிலம் + கடந்தான் = நிலங்கடந்தான்

  • = நில + கடந்தான் - (மகரம் (ம்) கெட்டு)
  • = நிலங் + கடந்தான் - (வருமொழி முதலிலுள்ள வல்லினத்திற்கு (க) இனமான மெல்லினமாகத் (ங்) திரிந்து)
  • = நிலங்கடந்தான்

இடையின முதன்மொழியோடுஇயல்பாகப் புணர்ந்தல்

  •  மரம் + வேர் = மரவேர் 

மகர ஈற்று மொழி இடையின(வ) முதன்மொழியோடு புணரும்போது மகரம் கெட்டு இயல்பாகப் புணர்ந்தது. 

மெல்லின முதன்மொழியோடுஇயல்பாகப் புணர்ந்தல்

  • மரம் + நார் = மரநார் 

மகர ஈற்று மொழி மெல்லின(ந) முதன்மொழியோடு புணரும்போது மகரம் கெட்டு இயல்பாகப் புணர்ந்தது.

விதி : ணகர, னகர ஈறு

"ணனவல் லினம் வரட் டறவும் பிறவரின்
இயல்பும் ஆகும் வேற்றுமைக் கல்வழிக்
கனைத்துமெய் வரினும் இயல்பா கும்மே" - நன்னூல் 209


ணகர ஈறு - ணகரம் டகரமாதல்

வேற்றுமைப் புணர்ச்சியில் நிலைமொழியீற்று 'ண' கரம் வல்லின முதன் மொழியோடு புணரும்போது 'ட' கரமாகத் திரியும். 

ணகரம் டகரமாதல்  மண் + கலம் = மட்கலம்

னகர ஈறு  - னகரம் றகரமாதல்

நிலைமொழியீற்று 'ன' கரம் வல்லின முதன் மொழியோடு புணரும் போது 'ற' கரமாகத் திரியும். 

னகரம் றகரமாதல் பொன் + குடம் = பொற்குடம்

விதி : லகர, ளகர ஈறு

"லளவேற் றுமையிற் றடவும் அல்வழி
அவற்றோ றெழ்வும் வலிவரி னாமெலி
மேவி னணவும் இடைவரின் இயல்பும்
ஆகும் இருவழி யானும் என்ப" - நன்னூல் 227


லளவேற் றுமையிற் றடவும் அல்வழி  - ல,ளகரம் ற,டகரமாதல்

நிலைமொழியீற்று லகரமும், ளகரமும், வல்லின முதன் மொழியோடு புணரும்போது லகரம் றகரமாகத் திரியும், ளகரம் டகரமாகத் திரியும். 

லகரம் றகரமாதல் கழல் + கால் = கழற்கால்
ளகரம் டகரமாதல் கள் + குடம் = கட்குடம்

அல்வழி அவற்றோ றெழ்வும் வலிவரி னாமெலி மேவி னணவும் - ல,ளகரம் ன,ணகரமாதல்

நிலைமொழியீற்று லகரமும், ளகரமும் மெல்லின முதன்மொழியோடு புணரும்போது லகரம் னகரமாகவும் ளகரம் ணகரமாகவும் திரியும்.

லகரம் னகரமாதல் சொல் + மாலை = சொன்மாலை
ளகரம் ணகரமாதல் அருள்+மொழி = அருண்மொழி

விதி : னல முன்னும் ணள முன்னும் தநக்கள் 

''னலமுன் றனவும் ணளமுன் டணவும்
ஆகும் தநக்கள் ஆயுங் காலே'' - நன்னூல் 237


னலமுன் றனவும் தநக்கள்

நிலைமொழி ஈற்றில் னகரமோ லகரமோ நின்று வருமொழி முதலில் தகரம்வரின் அது றகரமாக மாறும்; நகரம் வரின் அது னகரமாக மாறும்.

தகரம் றகரமாதல் பொன் + தீது = பொன்றீது ; கல் + தீது = கற்றீது;
நகரம் னகரமாதல் பொன் + நன்று = பொன்னன்று ; கல் + நன்று = கன்னன்று ;

ணள முன்னும் தநக்கள்

நிலைமொழி ஈற்றில் ணகரமோ ளகரமோ நின்று வருமொழி முதலில் தகரம்வரின் அது டகரமாகவும், நகரம் வரின் அது ணகரமாகவும் மாறும்.

தகரம் டகரமாதல் மண் + தீது = மண்டீது ; முள் + தீது = முட்டீது;
நகரம் ணகரமாதல் கண் + நீர் = கண்ணீர் ; முள் + நன்று = முண்ணன்று;

மெய்ம்மயக்கம்

ஒரு மெய்யெழுத்திற்கு அடுத்து வேறு மெய்யெழுத்து வருமானால் அதனை வேற்றுநிலை மெய்மயக்கம் என்பர்.

  • வேய்ங்குழல்
  • கூர்ஞ்சிறை
  • பாழ்ங்கிணறு

வலி மிகுதல்

புணர்ச்சியில் இரு சொற்கள் இணையும்போது வருமொழியில் "க, ச, த, ப" என்ற நான்கு வல்லின எழுத்துகளும் வந்தால் சில இடங்களில் மீண்டும் அதே எழுத்துத் தோன்றும். இதை 'வலி மிகுதல்' என்பர்.

  • கை + குழந்தை = கைக்குழந்தை
  • பூ + பறித்தான் = பூப்பறித்தான்

மெல்லினம் மிகுதல்

வலி மிகுதல் போன்றே சில இடங்களில் மெல்லினமும் மிகுதல் உண்டு. குறிப்பாக, வருமொழியில் "ங, ஞ, ந, ம" என்ற நான்கு மெல்லின எழுத்துகளும் வந்தால் சில இடங்களில் மீண்டும் அதே எழுத்துத் தோன்றும். இதை 'மெல்லினம் மிகுதல்' என்பர்.

1. யகர ஈற்றுப் புணர்ச்சி விதிகள்

'ய'கர ஈற்றுச் சொற்கள் முன் மெல்லினம் மிகும்.

  • மெய்+மயக்கம்=மெய்ம்மயக்கம்
  • மெய்+ஞானம்=மெய்ஞ்ஞானம்
  • செய்+நன்றி=செய்ந்நன்றி

2. 'ய, ர, ழ' கர ஈற்றுப் புணர்ச்சி விதிகள்

வேற்றுநிலை மெய்ம்மயக்கத்தில் 'ய, ர, ழ' முன்னர் மெல்லினம் மிகும்.

  • வேய்+குழல்=வேய்ங்குழல்
  • கூர்+சிறை = கூர்ஞ்சிறை
  • பாழ்+கிணறு = பாழ்ங்கிணறு

3. 'ள' கர ஈற்றுப் புணர்ச்சி விதிகள்

'புளி' என்னும் சுவைப் பெயர் முன்னர் வல்லெழுத்து மட்டுமன்றி மெல்லினமும் மிகும்.

  • புளி + கறி = புளிங்கறி
  • புளி + சோறு = புளிஞ்சோறு

4. உயிரெழுத்தை இறுதியில் கொண்ட மரப் பெயர்களுக்கு முன்னர் மெல்லினம் மிகும்.

  • மா + பழம் = மாம்பழம்
  • விள + காய் = விளங்காய்

எழுத்துகளும் உறவும் 

தன் எழுத்துடன் மட்டும் சேரும் எழுத்துகள் (உடனிலை மெய்ம்மயக்கம்) 

எழுத்துகளுக்குள் நட்பு உண்டு என்பதனை அறிந்தோம் அல்லவா? 

தமிழில் சில எழுத்துகள் தன் எழுத்தோடு மட்டும் சேர்ந்து வரும்.

உடனிலை மெய்ம்மயக்கம் எடுத்துக்காட்டு

  • பக்கம், 
  • அச்சம், 
  • மொத்தம், 
  • அப்பம். 

க், ச், த், ப் ஆகிய மெய்கள் தன் எழுத்துகளுடன் மட்டும் சேரும் எழுத்துகள். நீங்களும் இவ்வாறு சில சொற்களைச் சேர்த்துப் பாருங்கள். 

தன் எழுத்துடன் சேராது பிற எழுத்துகளுடன் சேரும் எழுத்துகள் (வேற்றுநிலை மெய்ம்மயக்கம்) 

வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எடுத்துக்காட்டு

  • சார்பு, 
  • வாழ்க்கை. 

ர், ழ் ஆகிய மெய்கள் தன் எழுத்துகளுடன் சேர்ந்து வாரா. பிற எழுத்துகளுடன் மட்டுமே சேர்ந்து வரும். 

தன் எழுத்து, பிற எழுத்து இரண்டுடனும் சேர்ந்து வரும் எழுத்துகளும் உள்ளன. 

  • ற் - குற்றம், மேற்கு; 
  • ன் - அன்னம், அன்பு. 

📌 நிறைவுரை & அடுத்த கட்டப் பயிற்சி

தமிழ் இலக்கணத்தில் முழு மதிப்பெண்கள் பெற புணர்ச்சி விதிகளை மனப்பாடம் செய்வதை விட, சொற்களைப் பிரித்துப் பார்த்து விதியைத் தொடர்புபடுத்துவதே சிறந்த வழியாகும். இப்பாடக் குறிப்பில் உள்ள 15 முக்கிய நன்னூல் விதிகளையும், மாதிரித் தேர்வையும் நன்கு பயிற்சி செய்யுங்கள்.

இப் பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் TNPSC தேர்வர்களுடன் பகிருங்கள்! மேலும், வல்லினம் மிகும் மற்றும் மிகா இடங்கள் தொடர்பான அடுத்த இலக்கணப் பாடத்தைப் படிக்க கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.

பாடக்குறிப்புகள் பதிவிறக்கம் PDF (Download Study Notes)

தேர்விற்குத் தயாராகும் மாணவர்களின் கவனத்திற்கு (TNPSC Group 4 VAO, 2, 2A, TET): இந்தப் பாடப்பகுதியின் முழுமையான இலக்கணக் குறிப்புகள் மற்றும் மாதிரி வினாவிடைகளை PDF வடிவில் இலவசமாகப் பதிவிறக்க கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.

தொடர்புடையவை - எழுத்திலக்கணம்

🎯 புணர்ச்சி இலக்கணம் (Punarchi Illakkanam) - மாதிரித் தேர்வு

1. 'மணி + அடித்தான் = மணியடித்தான்' – இதில் அமைந்துள்ள புணர்ச்சி விதி எது?





2. "உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே" – இப்புணர்ச்சி விதிக்குச் சரியான சான்று எது?





3. 'பெருமை + களிறு = பெருங்களிறு' – இதில் இடம்பெற்ற பண்புப் புணர்ச்சி விதிகளைக் கண்டறிக:





4. "இ ஈ ஐ வழி யவ்வும் ஏனை உயிர்வழி _____" – கோடிட்ட இடத்தை நிரப்புக:





5. 'கல் + அதர் = கல்லதர்' – இப்புணர்ச்சிக்குரிய சரியான விதி எது?





6. 'பசுமை + தமிழ் = பைந்தமிழ்' – இதில் 'பசு' என்பது 'பை' என மாறக் காரணமான பண்புப் புணர்ச்சி விதி எது?





7. நன்னூலின்படி விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?





8. 'பூ + கொடி' என்பது 'பூங்கொடி' எனப் புணர்வதற்குக் காரணமான விதி எது?





9. 'மரம் + வேர் = மரவேர்' – இப்புணர்ச்சியில் இடம்பெற்றுள்ள விதி என்ன?





10. 'வாழை + மரம் = வாழைமரம்' – இச்சொல் எவ்வகைப் புணர்ச்சிக்குச் சான்றாகும்?





🎯 உங்கள் மதிப்பெண்: 0 / 10

❓ அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் (FAQs)

Q1. புணர்ச்சி என்றால் என்ன?

பதில்: நிலைமொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதலெழுத்தும் ஒன்றுடன் ஒன்று இணைவதே புணர்ச்சி எனப்படும்.

Q2. புணர்ச்சியின் முதன்மை வகைகள் யாவை?

பதில்: புணர்ச்சி இயல்பு புணர்ச்சி மற்றும் விகாரப் புணர்ச்சி என இரண்டு வகைப்படும்.

Q3. விகாரப் புணர்ச்சியின் 3 வகைகள் யாவை?

பதில்: விகாரப் புணர்ச்சி தோன்றல், திரிதல், கெடுதல் என மூன்று வகைப்படும்.

Q4. உடம்படுமெய் எழுத்துகள் யாவை?

பதில்: நிலைமொழியும் வருமொழியும் உயிரெழுத்தாக இருக்கும்போது இடையில் தோன்றும் 'ய்', 'வ்' ஆகிய இரண்டும் உடம்படுமெய்கள் ஆகும்.

Q5. பண்புப்பெயர்ப் புணர்ச்சியில் முதலில் செயல்படும் விதி எது?

பதில்: பண்புப்பெயர்ப் புணர்ச்சியில் எப்போதுமே முதன்முதலில் செயல்படும் விதி "ஈறு போதல்" (மை விகுதி கெடுதல்) ஆகும்.

கருத்துரையிடுக

2 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Hi Please, Do not Spam in Comments

Top Post Ad