நன்னூல் நூற்பாக்கள் (1–55+) | பவணந்தி முனிவர் இலக்கணம் – TNPSC Group 2, 4

ManiMegala 0

TNPSC Group 2, 2A, மற்றும் Group 4 (VAO), TET போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பொதுத்தமிழ் பகுதிதான் அரசுப் பணி கனவை நனவாக்கும் திருப்புமுனையாக அமைகிறது. அதில் குறிப்பாக பொதுத்தமிழ் : Part - 1 அலகு I : இலக்கணம் - எழுத்து மற்றும் சொல் பகுதியிலிருந்து 25 கேள்விகள் கட்டாயம் கேட்கப்படும்.

எழுத்து, சொல் இலக்கணம் குறித்து தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் மற்றும் பவணந்தி முனிவர் நன்னூல் எழுதிய நன்னூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கண நூல்களில் தொல்காப்பியத்திற்கு அடுத்ததாக மிகுதியாகப் பயன்பாட்டிலிருக்கும் இலக்கண நூல், நன்னூல். தொல்காப்பியம், தெளிவும் எளிமையும் கொண்டு விளங்க, நன்னூல் செறிவும் சுருக்கமும் கொண்டு விளங்குகிறது.

நன்னூல் குறித்த குறிப்புகள் விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பில் விளக்கப்பட்டுள்ளது.

நன்னூல் இலக்கண நூல் குறிப்புகள் PDF & Quiz | TNPSC Group 2, 4 Tamil

தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நூல் மரபு 33 நூற்பாக்கள் | TNPSC பொதுத்தமிழ் இலக்கணம்

இங்கே தமிழ் இணையக் கல்விக் கழக (Tamilvu) மூல நூற்பாக்களை அடிப்படையாகக் கொண்டு  TNPSC எழுதுவோர் பயன்பெற வேண்டி நன்னூல் இலக்கண நூலில் உள்ள நூற்பாக்கள் எடுத்து எழுதப்பட்டுள்ளது.

📜பாடத்தலைப்புகள் (click here) (toc)

நன்னூல் நூற்பாக்கள் | TNPSC பொதுத்தமிழ் இலக்கணம்

நன்னூலின் பாயிரப் பிரிவுகள், அவற்றின் நூற்பா எண்ணிக்கைகள் மற்றும் நன்னூலின் இரண்டு அதிகாரங்களின் இயல்கள் மற்றும் நூற்பா விவரங்கள்.

நன்னூலின் மொத்த நூற்பாக்களின் எண்ணிக்கை: பாயிரம் (55) + எழுத்ததிகாரம் (208) + சொல்லதிகாரம் (262) சேர்த்து மொத்தம் 525 நூற்பாக்களைக் கொண்டுள்ளது.

நன்னூல் - அதிகார வாரியான நூற்பா விவரங்கள்
வ.எண் & பிரிவு / அதிகாரம்இயல்களின் எண்ணிக்கைநூற்பாக்கள் (பாக்கள்)
1. பாயிரம் (பொது & சிறப்பு)-55 நூற்பாக்கள் (1 - 55)
2. எழுத்துதிகாரம்5 இயல்கள்208 நூற்பாக்கள்
3. சொல்லதிகாரம்5 இயல்கள்262 நூற்பாக்கள்
மொத்தம் (நன்னூல் கிடைத்தவை)10 இயல்கள்மொத்தம் 525 நூற்பாக்கள்
  • பொதுப் பாயிரம் மற்றும் சிறப்புப் பாயிரத்தின் மொத்த நூற்பாக்கள்: 1 முதல் 55 வரை (மொத்தம் 55 நூற்பாக்கள்).
  • எழுத்ததிகாரத்தில் மொத்தம் 208 நூற்பாக்கள் மற்றும் 5 இயல்கள் உள்ளன.
  • சொல்லதிகாரத்தில் மொத்தம் 262 நூற்பாக்கள் மற்றும் 5 இயல்கள் உள்ளன.
நன்னூல் நூற்பாக்கள் (1–55+) | பவணந்தி முனிவர் இலக்கணம் – TNPSC Group 2, 4

நன்னூல் பாயிரம் (நூற்பா 1 - 55) விரிவான அட்டவணை - Nannool Payiram

நன்னூலின் பாயிரம் பகுதி இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

1. பொதுப் பாயிரம் (எல்லா நூல்களுக்கும் பொதுவாக இருக்க வேண்டிய இலக்கணங்களைக் கூறுவது) - நூற்பா 1 - 46

2. சிறப்புப் பாயிரம் (ஒரு குறிப்பிட்ட நூலுக்குரிய சிறப்புகளை மட்டும் கூறுவது) - நூற்பா 47 - 55

வ.எண் & பாயிரப் பிரிவு உட்பிரிவுகள் & விளக்கம் நூற்பா எண்கள்
1. பொதுப் பாயிரம்
(எல்லா நூல்களுக்கும் பொதுவாக இருக்க வேண்டிய இலக்கணங்களைக் கூறுவது)
பொதுப்பாயிரம் (பாயிரப் பெயர்கள், பொது–சிறப்பு வகைகள், ஐந்து கூறுகள்) நூற்பா 1 - 3
நூலினது வரலாறு நூற்பா 4 - 25
ஆசிரியனது வரலாறு நூற்பா 26 - 35
பாடஞ் சொல்லலினது வரலாறு நூற்பா 36 - 37
மாணாக்கனது வரலாறு நூற்பா 38 - 39
பாடங் கேட்டலின் வரலாறு நூற்பா 40 - 46
2. சிறப்புப் பாயிரம் ஒரு குறிப்பிட்ட நூலுக்குரிய சிறப்புகளை மட்டும் கூறுவது நூற்பா 47 - 55

பொதுப்பாயிரம் (நூற்பா 1 - 3)

நன்னூல் - நூற்பா 1:
முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம்
புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம். - பவணந்தி முனிவர்

விளக்கம்: பாயிரத்தைக் குறிக்கும் பிற பெயர்களாக முகவுரை, பதிகம், அணிந்துரை, நூன்முகம், புறவுரை, தந்துரை, புனைந்துரை ஆகியவை வழங்கப்படுகின்றன.

நன்னூல் - நூற்பா 2:
பாயிரம் பொதுச் சிறப்பு என இரு பாற்றே. - பவணந்தி முனிவர்

விளக்கம்: பாயிரம் பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் என இருவகைப்படும்.

நன்னூல் - நூற்பா 3:
நூலே நுவல்வோன் நுவலும் திறனே
கொள்வோன் கோடல் கூற்றாம் ஐந்தும்
எல்லாநூற்கும் இவை பொதுப் பாயிரம். - பவணந்தி முனிவர்

விளக்கம்: நூல், நுவல்வோன் (ஆசிரியர்), நுவலும் திறன், கொள்வோன் (மாணாக்கன்), கோடல், கூற்று ஆகிய ஐந்து கூறுகளும் எல்லா நூல்களுக்கும் உரிய பொதுப்பாயிரமாகும்.

நூலினது வரலாறு (நூற்பா 4 - 25)

நன்னூல் - நூற்பா 4:
நூலின் இயல்பே நுவலின் ஓர் இரு
பாயிரம் தோற்றி மும்மையின் ஒன்றாய்
நால்பொருள் பயத்தோடு எழுமதம் தழுவி
ஐ இரு குற்றமும் அகற்றி அம் மாட்சியோடு
எண் நான்கு உத்தியின் ஓத்துப் படலம்
என்னும் உறுப்பினில் சூத்திரம் காண்டிகை
விருத்தி ஆகும் விகற்ப நடை பெறுமே. - பவணந்தி முனிவர்

விளக்கம்: ஒரு நூலின் இயல்பானது இரண்டு வகைப் பாயிரங்களைக் கொண்டு, நூல் வகை மூன்றில் ஒன்றாக அமைந்து, நால்வகைப் பொருள்களைப் பயனாகத் தந்து, எழுவகை மதங்களைத் தழுவி, பத்துக் குற்றங்களை நீக்கி, பத்து அழகுகளோடும் முப்பத்திரண்டு உத்திகளோடும், ஓத்து–படலம் என்ற உறுப்புகளில் சூத்திரம், காண்டிகை, விருத்தி ஆகிய நடைகளைப் பெற்று விளங்கும்.

நன்னூல் - நூற்பா 5:
முதல் வழி சார்பு என நூல் மூன்று ஆகும். - பவணந்தி முனிவர்

விளக்கம்: நூல்கள் முதல்நூல், வழிநூல், சார்புநூல் (சார்பு என வழங்கப்படுவது) என மூன்று வகைப்படும்.

நன்னூல் - நூற்பா 6:
அவற்றுள்,
வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதல்நூல் ஆகும். - பவணந்தி முனிவர்

விளக்கம்: வினை நீங்கித் தெளிவான அறிவு பெற்ற முதன்மை ஆசிரியன் (முனைவன்) இயற்றியதே முதல்நூல் ஆகும்.

நன்னூல் - நூற்பா 7:
முன்னோர் நூலின் முடிபு ஒருங்கு ஒத்துப்
பின்னோன் வேண்டும் விகற்பம் கூறி
அழியா மரபினது வழிநூல் ஆகும். - பவணந்தி முனிவர்

விளக்கம்: முன்னோர் இயற்றிய நூலின் கருத்தோடு ஒத்து, பின்னோர் காலத்திற்கேற்பத் தேவையான மாற்றங்களையும் கூறி, மரபு பிறழாமல் அமைவது வழிநூல் ஆகும்.

நன்னூல் - நூற்பா 8:
இருவர் நூற்கும் ஒருசிறை தொடங்கித்
திரிபு வேறு உடையது புடைநூல் ஆகும். - பவணந்தி முனிவர்

விளக்கம்: முதல்நூல், வழிநூல் ஆகிய இருவகை நூல்களுக்கும் ஒருபுறம் சார்ந்து, வேறுபாடுகளும் உடையதாக அமைவது சார்புநூல் (புடைநூல்) ஆகும்.

நன்னூல் - நூற்பா 9:
முன்னோர் மொழிபொருளே அன்றி அவர்மொழியும்
பொன்னேபோல் போற்றுவம் என்பதற்கும்-முன்னோரின்
வேறுநூல் செய்தும் எனும் மேற்கோள் இல் என்பதற்கும்
கூறுபழம் சூத்திரத்தின் கோள். - பவணந்தி முனிவர்

விளக்கம்: முன்னோர் கூறிய பொருள் மட்டுமன்றி அவர் மொழிகளையும் மதிப்பதற்கும், வழிநூல் இயற்றும் மரபிற்கும் பழைய சூத்திரங்களின் கருத்தே அடிப்படையாகும் என்பதை விளக்குகிறது.

நன்னூல் - நூற்பா 10:
அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே. - பவணந்தி முனிவர்

விளக்கம்: அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு உறுதிப் பொருள்களை அடைவதே நூலின் பயனாகும்.

நன்னூல் - நூற்பா 11:
எழு வகை மதமே உடன்படல் மறுத்தல்
பிறர்தம் மதமேற் கொண்டு களைவே
தாஅன் நாட்டித் தனாது நிறுப்பே
இருவர் மாறுகோள் ஒருதலை துணிவே
பிறர்நூல் குற்றம் காட்டல் ஏனைப்
பிறிதொடு படாஅன் தன்மதம் கொளலே. - பவணந்தி முனிவர்

விளக்கம்: நூலில் கையாளப்படும் ஏழு வகை மதக் கொள்கைகளாவன: உடன்படல், மறுத்தல், பிறர் மதம் மேற்கொண்டு களைதல், தான் நாட்டித் தனாது நிறுத்தல், இருவர் மாறுகோள் ஒருதலை துணிதல், பிறர்நூல் குற்றம் காட்டல், பிறிதொடு படாஅன் தன்மதம் கொளல்.

நன்னூல் - நூற்பா 12:
குன்றக் கூறல் மிகைபடக் கூறல்
கூறியது கூறல் மாறுகொளக் கூறல்
வழூஉச்சொல் புணர்த்தல் மயங்க வைத்தல்
வெற்றெனத் தொடர்ந்தல் மற்றொன்று விரித்தல்
சென்று தேய்ந்து இறுதல் நின்று பயன் இன்மை
என்றிவை ஈர் ஐங் குற்றம் நூற்கே. - பவணந்தி முனிவர்

விளக்கம்: நூலில் ஏற்படக் கூடாத பத்துக் குற்றங்களாவன: குன்றக் கூறல், மிகைபடக் கூறல், கூறியது கூறல், மாறுகொளக் கூறல், வழூஉச்சொல் புணர்த்தல், மயங்க வைத்தல், வெற்றெனத் தொடர்ந்தல், மற்றொன்று விரித்தல், சென்று தேய்ந்து இறுதல், நின்று பயன் இன்மை.

நன்னூல் - நூற்பா 13:
சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்
நவின்றோர்க்கு இனிமை நல்மொழி புணர்த்தல்
ஓசை உடைமை ஆழமுடைத்து ஆதல்
முறையின் வைப்பே உலகம் மலையாமை
விழுமியது பயத்தல் விளங்கு உதாரணத்தது
ஆகுதல் நூலிற்கு அழகு எனும் பத்தே. - பவணந்தி முனிவர்

விளக்கம்: நூலின் பத்து அழகுகளாவன: சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல், நவின்றோர்க்கு இனிமை, நல்மொழி புணர்த்தல், ஓசை உடைமை, ஆழமுடைத்து ஆதல், முறையின் வைப்பு, உலகம் மலையாமை, விழுமியது பயத்தல், விளங்கு உதாரணத்தது ஆகுதல்.

நன்னூல் - நூற்பா 14:
நுதலிப் புகுதல் ஓத்துமுறை வைப்பே
தொகுத்துச் சுட்டல் வகுத்துக் காட்டல்
முடித்துக் காட்டல் முடிவிடம் கூறல்
தானெடுத்து மொழிதல் பிறன்கோள் கூறல்
சொல்பொருள் விரித்தல் தொடர்ச்சொல் புணர்த்தல்
இரட்டுற மொழிதல் ஏதுவின் முடித்தல்
ஒப்பின் முடித்தல் மாட்டெறிந்து ஒழுகல்
இறந்தது விலக்கல் எதிரது போற்றல்
முன்மொழிந்து கோடல் பின்னது நிறுத்தல்
விகற்பத்தின் முடித்தல் முடிந்தது முடித்தல்
உரைத்தும் என்றல் உரைத்தாம் என்றல்
ஒருதலை துணிதல் எடுத்துக் காட்டல்
எடுத்த மொழியின் எய்த வைத்தல்
இன்னது அல்லது இதுஎன மொழிதல்
எஞ்சிய சொல்லின் எய்தக் கூறல்
பிறநூல் முடிந்தது தானுடன் படுதல்
தன்குறி வழக்கம் மிகஎடுத்து உரைத்தல்
சொல்லின் முடிவின் அப்பொருள் முடித்தல்
ஒன்றினம் முடித்தல் தன்னினம் முடித்தல்
உய்த்துணர வைப்புஎன உத்திஎண் நான்கே. - பவணந்தி முனிவர்

விளக்கம்: நூலில் அமைக்கப்படும் முப்பத்திரண்டு (8 × 4) உத்திகளையும் இந்நூற்பா வரிசைப்படுத்திக் கூறுகிறது.

நன்னூல் - நூற்பா 15:
நூல்பொருள் வழக்கொடு வாய்ப்பக் காட்டி
ஏற்புழி அறிந்து இதற்கு இவ்வகை யாமெனத்
தகும் வகை செலுத்துதல் தந்திர உத்தி. - பவணந்தி முனிவர்

விளக்கம்: நூலின் பொருளை உலக வழக்கோடு பொருந்தக் காட்டி, பொருத்தமான இடமறிந்து அதற்கு உரிய வகையில் செலுத்துவதே தந்திர உத்தியாகும்.

நன்னூல் - நூற்பா 16:
நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு
ஓரினப் பொருளை ஒருவழி வைப்பது
ஓத்து என மொழிப உயர்மொழிப் புலவர். - பவணந்தி முனிவர்

விளக்கம்: ஒரே இனத்தைச் சேர்ந்த மணிகளை வரிசையாக வைத்தாற்போல, ஒரே இனப் பொருள்களை ஒன்றாகத் தொகுத்து வைப்பது 'ஓத்து' எனப்படும்.

நன்னூல் - நூற்பா 17:
ஒருநெறி இன்றி விரவிய பொருளால்
பொதுமொழி தொடரின் அதுபடலம் ஆகும். - பவணந்தி முனிவர்

விளக்கம்: ஒரே நெறியாக இல்லாமல் பலவகையான பொருள்களும் கலந்து வரும் வகையில் அமைவது 'படலம்' ஆகும்.

நன்னூல் - நூற்பா 18:
சில்வகை எழுத்தில் பல்வகைப் பொருளைச்
செவ்வன் ஆடியின் செறித்து இனிது விளக்கித்
திட்பம் நுட்பம் சிறந்தன சூத்திரம். - பவணந்தி முனிவர்

விளக்கம்: குறைவான எழுத்துகளில் பலவகையான பொருள்களைச் செறிவாகவும் தெளிவாகவும், திட்பமும் நுட்பமும் சிறக்குமாறு அமைப்பது 'சூத்திரம்' ஆகும்.

நன்னூல் - நூற்பா 19:
ஆற்று ஒழுக்கு அரிமா நோக்கம் தவளைப் பாய்த்து
பருந்தின் வீழ்வு அன்ன சூத்திர நிலை. - பவணந்தி முனிவர்

விளக்கம்: ஆற்று ஒழுக்கு, அரிமா நோக்கம், தவளைப் பாய்த்து, பருந்தின் வீழ்வு ஆகிய உவமைகளால் சூத்திரங்களின் அமைப்பு நிலைகள் விளக்கப்படுகின்றன.

நன்னூல் - நூற்பா 20:
பிண்டம் தொகை வகை குறியே செய்கை
கொண்டு இயல் புறனடைக் கூற்றன சூத்திரம். - பவணந்தி முனிவர்

விளக்கம்: பிண்டம், தொகை, வகை, குறி, செய்கை, புறனடை ஆகிய கூறுகளோடு கூடிய சூத்திர வகைகளை இந்நூற்பா கூறுகிறது.

நன்னூல் - நூற்பா 21:
பாடம் கருத்தே சொல்வகை சொல்பொருள்
தொகுத்துரை உதாரணம் வினாவிடை விசேடம்
விரிவு அதிகாரம் துணிவு பயனோடு
ஆசிரிய வசனம் என்று ஈரேழ் உரையே. - பவணந்தி முனிவர்

விளக்கம்: உரையின் உறுப்புகளாகக் கருதப்படும் பதினான்கு கூறுகளை (பாடம், கருத்து, சொல்வகை, சொல்பொருள், தொகுத்துரை, உதாரணம், வினாவிடை, விசேடம், விரிவு, அதிகாரம், துணிவு, பயன், ஆசிரிய வசனம்) இந்நூற்பா விளக்குகிறது.

நன்னூல் - நூற்பா 22:
கருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றினும்
அவற்றொடு வினாவிடை ஆக்க லானும்
சூத்திரத்துள் பொருள் தோற்றுவ காண்டிகை. - பவணந்தி முனிவர்

விளக்கம்: கருத்து, பதப்பொருள், காட்டு (உதாரணம்) ஆகிய மூன்றோடும் வினாவிடை சேர்த்துச் சூத்திரத்தின் பொருளை விளங்கக் காட்டுவது 'காண்டிகை' உரையாகும்.

நன்னூல் - நூற்பா 23:
சூத்திரத்துள் பொருள் அன்றியும் ஆண்டைக்கு
இன்றி யமையா யாவையும் விளங்கத்
தன் உரையானும் பிற நூலானும்
ஐயம் அகல ஐங் காண்டிகை உறுப்பொடு
மெய்யினை எஞ்சாது இசைப்பது விருத்தி. - பவணந்தி முனிவர்

விளக்கம்: சூத்திரப் பொருள் மட்டுமின்றித் தேவையான பிற விளக்கங்களையும், சொந்த உரையாலும் பிற நூல்களாலும் சந்தேகம் நீங்க விரிவாகக் கூறுவது 'விருத்தி' உரையாகும்.

நன்னூல் - நூற்பா 24:
பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச்
செஞ்சொல் புலவனே சேயிழையா-எஞ்சாத
கையே வாயாகக் கதிரே மதியாக
மையிலா நூல் முடியும் ஆறு. - பவணந்தி முனிவர்

விளக்கம்: நூல் இயற்றும் செயல்முறையை உருவகப்படுத்திக் கூறும் இப்பாடல், குற்றமற்ற நூல் உருவாகும் நிலையை விளக்குகிறது.

நன்னூல் - நூற்பா 25:
உரத்தின் வளம் பெருக்கி உள்ளிய தீமை
புரத்தின் வளம் முருக்கிப் பொல்லா-மரத்தின்
கனக்கோட்டம் தீர்க்கும்நூல் அஃதேபோல் மாந்தர்
மனக்கோட்டம் தீர்க்கும்நூல் மாண்பு. - பவணந்தி முனிவர்

விளக்கம்: வலிமை (உரம்) பெருக்கி, தீமையை நீக்கி, நகரின் (புரம்) வளத்தைச் சிதைக்காமல், மரத்தின் கனமான கோணலைச் செப்பனிடும் கருவிபோல மனிதர்களின் மனக்கோணலையும் நீக்குவது சிறந்த நூலின் மாண்பாகும்.

ஆசிரியனது வரலாறு (நூற்பா 26 - 35)

நன்னூல் - நூற்பா 26:
குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை
கலை பயில் தெளிவு கட்டுரை வன்மை
நிலம் மலை நிறைகோல் மலர் நிகர் மாட்சியும்
உலகியல் அறிவோடு உயர்குணம் இனையவும்
அமைபவன் நூல் உரை ஆசிரி யன்னே. - பவணந்தி முனிவர்

விளக்கம்: நல்ல குலம், அருள், தெய்வ வழிபாடு, கொள்கை மேன்மை, கலை பயின்ற தெளிவு, சொல்லாற்றல், நிலம்–மலை–நிறைகோல்–மலர் ஆகியவற்றின் மாண்புகள், உலகியல் அறிவு மற்றும் உயர்ந்த பண்புகள் ஆகியவை அமைந்தவனே நல்லாசிரியன் ஆவான்.

நன்னூல் - நூற்பா 27:
தெரிவரும் பெருமையும் திண்மையும் பொறையும்
பருவ முயற்சி அளவில் பயத்தலும்
மருவிய நல் நில மாண்பு ஆகுமே. - பவணந்தி முனிவர்

விளக்கம்: பெருமை, திண்மை, பொறுமை, தகுந்த பருவத்தில் முயற்சி செய்தால் அளவோடு பயன் தருதல் ஆகியவை நல்ல நிலத்தின் சிறப்பியல்புகளாகும் (இவை ஆசிரியரிடமும் இருக்க வேண்டும்).

நன்னூல் - நூற்பா 28:
அளக்கல் ஆகா அளவும் பொருளும்
துளக்கல் ஆகா நிலையும் தோற்றமும்
வறப்பினும் வளம்தரும் வண்மையும் மலைக்கே. - பவணந்தி முனிவர்

விளக்கம்: அளவிட முடியாத அளவும் பொருளும், அசையாத நிலையும் தோற்றமும், வறட்சி காலத்திலும் வளம் தரும் வள்ளன்மையும் மலைக்கு உரியவை (இவை ஆசிரியரிடமும் அமைய வேண்டும்).

நன்னூல் - நூற்பா 29:
ஐயம் தீரப் பொருளை உணர்த்தலும்
மெய்ந்நடு நிலையும் மிகும்நிறை கோற்கே. - பவணந்தி முனிவர்

விளக்கம்: ஐயம் நீங்கப் பொருளைத் தெளிவாகக் காட்டுதலும், உண்மையான நடுநிலையும் தராசுக் கோலுக்கு (நிறைகோல்) உரியவை; ஆசிரியரும் அவ்வாறே நடுநிலையோடு பாடம் கற்பிக்க வேண்டும்.

நன்னூல் - நூற்பா 30:
மங்கலம் ஆகி இன்றி அமையாது
யாவரும் மகிழ்ந்து மேற்கொள மெல்கிப்
பொழுதின் முகம் மலர்வு உடையது பூவே. - பவணந்தி முனிவர்

விளக்கம்: மங்கலமாக விளங்குதல், இன்றியமையாமை, அனைவரும் மகிழ்ந்து ஏற்றுக்கொள்ளுதல், மென்மையும் பொழுதுக்கேற்ப மலர்ச்சியும் கொண்டிருத்தல் ஆகியவை பூவின் இயல்புகளாகும்; ஆசிரியரும் முகமலர்ச்சியோடு இனிமையாகக் கற்பிக்க வேண்டும்.

நன்னூல் - நூற்பா 31:
மொழிகுணம் இன்மையும் இழிகுண இயல்பும்
அழுக்காறு அவா வஞ்சம் அச்சம் ஆடலும்
கழல்குடம் மடல்பனை பருத்திக் குண்டிகை
முடத்தெங்கு ஒப்பென முரண்கொள் சிந்தையும்
உடையோர் இலர் ஆசிரியர் ஆகுதலே. - பவணந்தி முனிவர்

விளக்கம்: மொழிநலக் குறைபாடு, இழிவான குணங்கள், பொறாமை, பேராசை, வஞ்சனை, அச்சம், செருக்கு ஆகியவையும், கழல்குடம்–மடல்பனை–பருத்திக் குண்டிகை–முடத்தெங்கு போன்ற முரண்பட்ட சிந்தனைகளும் கொண்டவர்கள் ஆசிரியர் ஆகத் தகுதியற்றவர் ஆவர்.

நன்னூல் - நூற்பா 32:
பெய்தமுறை அன்றிப் பிறழ உடன் தரும்
செய்தி கழல்பெய் குடத்தின் சீரே. - பவணந்தி முனிவர்

விளக்கம்: ஊற்றிய முறைப்படி இல்லாமல் மாறி, ஒன்றாகக் கலந்து தரும் தன்மை கழல்குடத்திற்கு உரியது (கற்றவற்றை ஒழுங்கின்றி மாற்றிச் சொல்லும் ஆசிரியரின் இயல்பை இது குறிக்கிறது).

நன்னூல் - நூற்பா 33:
தானே தரக்கொளின் அன்றித் தன்பால்
மேவிக் கொளக்கொடா இடத்தது மடல்பனை. - பவணந்தி முனிவர்

விளக்கம்: தானாகக் கொடுத்தாலன்றி, பிறர் சென்று கேட்டாலும் தராத தன்மை மடல்பனைக்கு உரியது (கற்பிக்க முன்வராத அல்லது தயங்கும் இயல்பைக் குறிக்கிறது).

நன்னூல் - நூற்பா 34:
அரிதின் பெயக்கொண்டு அப்பொருள் தான்பிறர்க்கு
எளிது ஈவு இல்லது பருத்திக் குண்டிகை. - பவணந்தி முனிவர்

விளக்கம்: அரிதாக உள்ளே பெற்றுக்கொண்டு, அந்தப் பொருளைப் பிறருக்கு எளிதாக வெளியே தராத தன்மை பருத்திக் குண்டிகைக்கு உரியது (தான் கற்றதைப் பிறருக்குக் கற்பிக்காமல் மறைக்கும் குணத்தைக் குறிக்கிறது).

நன்னூல் - நூற்பா 35:
பல்வகை உதவி வழிபடு பண்பின்
அல்லோர்க்கு அளிக்கும் மது முடத்தெங்கே. - பவணந்தி முனிவர்

விளக்கம்: பலவகையிலும் உதவியும் வழிபட்டும் நிற்போருக்கு அன்றி, தகுதியற்றவர்க்கும் கொடுக்கும் இயல்பு முடத்தெங்கிற்கு உரியது.

பாடஞ் சொல்லலினது வரலாறு (நூற்பா 36 - 37)

நன்னூல் - நூற்பா 36:
ஈதல் இயல்பே இயம்பும் காலை
காலமும் இடனும் வாலிதின் நோக்கிச்
சிறந்துழி இருந்துதன் தெய்வம் வாழ்த்தி
உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைத்து
விரையான் வெகுளான் விரும்பி முகம் மலர்ந்து
கொள்வோன் கொள்வகை அறிந்துஅவன் உளம்கொளக்
கோட்டம் இல் மனத்தின் நூல் கொடுத்தல் என்ப உரை. - பவணந்தி முனிவர்

விளக்கம்: பாடம் கற்பிக்கும்போது தகுந்த காலமும் இடமும் ஆராய்ந்து, சிறந்த இடத்தில் அமர்ந்து, தம் தெய்வத்தை வாழ்த்தி, கற்பிக்க வேண்டிய பொருளை மனதில் இருத்தி, அவசரப்படாமலும் கோபப்படாமலும், விருப்பத்தோடு முகமலர்ச்சியுடன், மாணாக்கன் கற்கும் திறன் அறிந்து அவன் மனம் கொள்ளுமாறு, மாறுபாடில்லாத மனத்தோடு நூலைக் கற்பிப்பதே 'உரைத்தல்' (பாடம் சொல்லுதல்) ஆகும்.

நன்னூல் - நூற்பா 37:
தன்மகன் ஆசான் மகனே மன்மகன்
பொருள்நனி கொடுப்போன் வழிபடு வோனே
உரைகோ ளாளற்கு உரைப்பது நூலே. - பவணந்தி முனிவர்

விளக்கம்: தன் மகன், ஆசிரியனின் மகன், அரசன் மகன், மிகுதியான பொருள் கொடுப்பவன், ஆசிரியனை வழிபட்டு நிற்பவன் ஆகிய பாடம் ஏற்கத் தகுதியான மாணாக்கர்களுக்கே நூலைக் கற்பிக்க வேண்டும்.

மாணாக்கனது வரலாறு (நூற்பா 38 - 39)

நன்னூல் - நூற்பா 38:
அன்னம் ஆவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடம் ஆடு எருமை நெய்யரி
அன்னர் தலை இடை கடை மாணாக்கர். - பவணந்தி முனிவர்

விளக்கம்: அன்னப்பறவை, பசு, நிலம், கிளி ஆகியவை தலை மாணாக்கருக்கும்; உடைந்த குடம், ஆடு ஆகியவை இடை மாணாக்கருக்கும்; எருமை, நெய்யரி (வடிகட்டி/நெய்யுள்ள பை) ஆகியவை கடை மாணாக்கருக்கும் உவமைகளாகக் கூறப்பட்டுள்ளன.

நன்னூல் - நூற்பா 39:
களிமடி மானி காமி கள்வன்
பிணியன் ஏழை பிணக்கன் சினத்தன்
துயில்வோன் மந்தன் தொன்னூற்கு அஞ்சித்
தடுமாறு உளத்தன் தறுகணன் பாவி
படிறன் இன்னோர்க்குப் பகரார் நூலே. - பவணந்தி முனிவர்

விளக்கம்: மதுமயக்கம், சோம்பல், மானக்கேடு, காமம், களவு, நோய், வறுமை/அறிவற்ற நிலை, பிணக்கு, சினம், மிகுந்த தூக்கம், மந்தபுத்தி, பழைய நூல்களுக்கு அஞ்சித் தடுமாறும் மனம், கொடுமை, பாவச்செயல், வஞ்சனை ஆகிய குணங்கள் கொண்டவர்களுக்கு நூலைக் கற்பிக்கக் கூடாது.

பாடங் கேட்டலின் வரலாறு (நூற்பா 40 - 46)

நன்னூல் - நூற்பா 40:
கோடல் மரபே கூறும் காலை
பொழுதொடு சென்று வழிபடல் முனியான்
குணத்தொடு பழகி அவன்குறிப்பின் சார்ந்து
இரு என இருந்து சொல் எனச் சொல்லிப்
பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகிச்
சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கிச்
செவி வாய் ஆக நெஞ்சு களன் ஆகக்
கேட்டவை கேட்டு அவை விடாது உளத்து அமைத்துப்
போ எனப் போதல் என்மனார் புலவர். - பவணந்தி முனிவர்

விளக்கம்: தகுந்த காலத்தோடு சென்று ஆசிரியரை வழிபடுவதில் சலிப்படையாமல், நற்குணங்களோடு பழகி, அவரின் குறிப்பறிந்து நடந்து, இருக்கச் சொன்னால் இருந்து, சொல்லச் சொன்னால் சொல்லி, தாகத்துடன் நீரைப் பருகுபவன் போன்ற ஆர்வத்துடன், ஓவியப் பாவைபோல் அடங்கி, செவியை வாயாகவும் நெஞ்சை வயலாகவும் கொண்டு, கேட்டவற்றை விடாமல் மனதில் பதித்து, செல்லச் சொன்னால் செல்ல வேண்டும் என்று புலவர்கள் கூறுவர்.

நன்னூல் - நூற்பா 41:
நூல்பயில் இயல்பே நுவலின் வழக்கு அறிதல்
பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல்
ஆசான் சார்ந்து அவை அமைவரக் கேட்டல்
அம் மாண்பு உடையோர் தம்மொடு பயிறல்
வினாதல் வினாயவை விடுத்தல் என்று இவை
கடனாக் கொளினே மடம் நனி இகக்கும். - பவணந்தி முனிவர்

விளக்கம்: உலக வழக்கறிதல், பாடம் போற்றுதல், கேட்டவற்றை நினைத்தல், ஆசிரியரைச் சார்ந்து பொருத்தமாகக் கேட்டல், நல்ல மாண்புடைய மாணாக்கரோடு சேர்ந்து பழகுதல், வினா எழுப்புதல், கேட்ட வினாக்களுக்கு விடையளித்தல் ஆகியவற்றைக் கடமையாகக் கொண்டால் அறியாமை பெரிதும் நீங்கும்.

நன்னூல் - நூற்பா 42:
ஒருகுறி கேட்போன் இருகால் கேட்பின்
பெருக நூலில் பிழைபாடு இலனே. - பவணந்தி முனிவர்

விளக்கம்: ஒரு குறிப்போடு பாடம் கேட்பவன் இருமுறை கேட்டால், நூலில் பெருமளவில் பிழையற்றவனாவான்.

நன்னூல் - நூற்பா 43:
முக்கால் கேட்பின் முறையறிந்து உரைக்கும். - பவணந்தி முனிவர்

விளக்கம்: மூன்று முறை கேட்டால், நூலின் முறைமையறிந்து பிறருக்குச் சொல்லும் திறன் பெறுவான்.

நன்னூல் - நூற்பா 44:
ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும்
கால்கூறு அல்லது பற்றலன் ஆகும். - பவணந்தி முனிவர்

விளக்கம்: ஆசிரியர் சொன்னதைப் பொருத்தமாகக் கேட்டாலும், ஒருமுறை மட்டுமே கேட்டால் அதில் கால் பங்கு (1/4) அளவே மனதில் பதியும்.

நன்னூல் - நூற்பா 45:
அவ்வினை யாளரொடு பயில்வகை ஒருகால்
செவ்விதின் உரைப்ப அவ்விரு காலும்
மை அறு புலமை மாண்பு உடைத்து ஆகும். - பவணந்தி முனிவர்

விளக்கம்: கற்கும் மாணாக்கரோடு சேர்ந்து பயிலும் முறையில் ஒருமுறை தெளிவாகச் சொன்னால், அந்த இருமுறை கேட்பதும் கற்றலும் குற்றமற்ற புலமை மாண்பைப் பெறும்.

நன்னூல் - நூற்பா 46:
அழலின் நீங்கான் அணுகான் அஞ்சி
நிழலின் நீங்கான் நிறைந்த நெஞ்சமோடு
எத்திறத்து ஆசான் உவக்கும் அத்திறம்
அறத்தின் திரியாப் படர்ச்சி வழிபாடே. - பவணந்தி முனிவர்

விளக்கம்: நெருப்பிற்கு மிக அருகிலும் செல்லாமல், ரொம்பத் தூரமும் விலகாமல் காய்வதுபோலவும்; நிழலை விட்டு நீங்காமலும், அளவோடு நெருங்கியும்; அறநெறி பிறழாமல் ஆசிரியர் எந்த வகையில் மகிழ்வாரோ அந்த வகையில் பணிந்து நடப்பதே சிறந்த வழிபாடாகும்.

சிறப்புப்பாயிர இலக்கணம் (நூற்பா 47 - 55)

நன்னூல் - நூற்பா 47:
ஆக்கியோன் பெயரே வழியே எல்லை
நூல்பெயர் யாப்பே நுதலிய பொருளே
கேட்போர் பயனோடு ஆய் எண் பொருளும்
வாய்ப்பக் காட்டல் பாயிரத்து இயல்பே. - பவணந்தி முனிவர்

விளக்கம்: நூலாசிரியரின் பெயர், வழிநூல்/முதல்நூல் வகை, எல்லை, நூற்பெயர், யாப்பு, சொல்ல வந்த பொருள், கேட்போர், பயன் ஆகிய எட்டுப் பொருள்களையும் பொருத்தமாகக் காட்டுவது சிறப்புப் பாயிரத்தின் இயல்பாகும்.

நன்னூல் - நூற்பா 48:
காலம் களனே காரணம் என்றுஇம்
மூவகை ஏற்றி மொழிநரும் உளரே. - பவணந்தி முனிவர்

விளக்கம்: காலம், களம் (நூல் அரங்கேறிய/கற்பிக்கப்பட்ட இடம்), காரணம் ஆகிய மூன்று கூறுகளையும் கூடுதலாகச் சேர்த்துக் கூறுவோரும் உள்ளனர்.

நன்னூல் - நூற்பா 49:
முதல்நூல் கருத்தன் அளவு மிகுதி
பொருள் செய்வித்தோன் தன்மை முதல் நிமித்தினும்
இடுகுறி யானும் நூற்கு எய்தும் பெயரே. - பவணந்தி முனிவர்

விளக்கம்: முதல்நூலின் பெயர், ஆசிரியர் பெயர், அளவு, சிறப்பு/மிகுதி, பொருள், செய்வித்தோன் தன்மை முதலிய காரணங்களாலும், இடுகுறிப் பெயராலும் நூலுக்குப் பெயர் அமையும்.

நன்னூல் - நூற்பா 50:
தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்ப்பு
எனத்தகும் நூல்யாப்பு ஈர் இரண்டு என்ப. - பவணந்தி முனிவர்

விளக்கம்: தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்ப்பு என நூல் அமைப்பு (யாப்பு) நான்கு வகைப்படும் என்று கூறுவர்.

நன்னூல் - நூற்பா 51:
தன் ஆசிரியன் தன்னொடு கற்றோன்
தன் மாணாக்கன் தகும் உரைகாரன் என்று
இன்னோர் பாயிரம் இயம்புதல் கடனே. - பவணந்தி முனிவர்

விளக்கம்: தம் ஆசிரியர், உடன் கற்றவர், தம் மாணாக்கர், தகுதியான உரையாசிரியர் ஆகியோரைப் பாயிரத்தில் குறிப்பிடுவது மரபாகும்.

நன்னூல் - நூற்பா 52:
தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும்
தான் தன் புகழ்தல் தகுதி அன்றே. - பவணந்தி முனிவர்

விளக்கம்: மறைந்திருந்த பொருள்களை வெளிப்படுத்திப் பல துறைகளையும் நிறைவு செய்தாலும், தன்னைத் தானே புகழ்ந்து கொள்வது தகுதியானதன்று.

நன்னூல் - நூற்பா 53:
மன்னுடை மன்றத்து ஓலைத் தூக்கினும்
தன்னுடை ஆற்றல் உணரார் இடையினும்
மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும்
தன்னை மறுதலை பழித்த காலையும்
தன்னைப் புகழ்தலும் தகும் புலவோற்கே. - பவணந்தி முனிவர்

விளக்கம்: அரசவை மன்றத்தில் நூல் ஏடு ஏற்றி நிற்கும்போதும், தம் ஆற்றலை உணராதவர் இடையிலும், அவையில் வாதிட்டு வெல்லும் நேரத்திலும், எதிரிகள் பழிக்கும் காலத்திலும் புலவர் தம் திறமையை எடுத்துரைப்பது தகும்.

நன்னூல் - நூற்பா 54:
ஆயிரம் முகத்தான் அகன்றது ஆயினும்
பாயிரம் இல்லது பனுவல் அன்றே. - பவணந்தி முனிவர்

விளக்கம்: ஆயிரம் வகைகளால் விரிந்து அமைந்ததாக இருந்தாலும், பாயிரம் இல்லாதது முழுமையான நூல் ஆகாது.

நன்னூல் - நூற்பா 55:
மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும்
ஆடுஅமைத்தோள் நல்லார்க்கு அணியும்போல்-நாடிமுன்
ஐதுரையா நின்ற அணிந்துரையை எந்நூற்கும்
பெய்துரையா வைத்தார் பெரிது. - பவணந்தி முனிவர்

விளக்கம்: மாளிகைக்குச் சித்திரமும், மாநகருக்குக் கோபுரமும், அணிகலன் அணிந்த நல்ல பெண்களுக்கு நகைகளும் அழகு சேர்ப்பதுபோல, எந்தவொரு நூலுக்கும் பாயிரம் (அணிந்துரை) அமைத்துத் தருவது சிறப்பானது ஆகும்.

எழுத்ததிகாரம் - எழுத்தியல் (நூற்பா 56 - 57)

எழுத்தியல் (நூற்பா 56 - 57)

நன்னூல் - நூற்பா 56:
பூமலி அசோகின் புனைநிழல் அமர்ந்த
நான்முகன் தொழுது நன்கு இயம்புவன் எழுத்தே. - பவணந்தி முனிவர்

விளக்கம்: மலர்கள் நிறைந்த அசோக மரத்தின் அழகிய நிழலில் வீற்றிருக்கும் நான்முகனாகிய அருகக் கடவுளை வணங்கி, எழுத்து இலக்கணத்தைச் சிறப்பாகக் கூறத் தொடங்குகிறேன் என்ற கடவுள் வாழ்த்து நூற்பா இதுவாகும்.

நன்னூல் - நூற்பா 57:
எண் பெயர் முறை பிறப்பு உருவம் மாத்திரை
முதல் ஈறு இடைநிலை போலி என்றா
பதம் புணர்பு எனப் பன்னிரு பாற்று அதுவே. - பவணந்தி முனிவர்

விளக்கம்: எழுத்திலக்கணம் எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதல், ஈறு, இடைநிலை, போலி, பதம், புணர்பு (புணர்ச்சி) எனப் பன்னிரண்டு வகைகளைக் கொண்டதாக அமைகிறது.

  1. எண் (முதல் எழுத்து, சார்பெழுத்து)
  2. பெயர் (சுட்டு, வினா, இடுகுறி, காரணம், இன எழுத்துகள், மயங்கொலிகள்)
    1. சுட்டெழுத்துகள்
    2. வினா எழுத்துகள்
    3. இடுகுறிப் பெயர்கள்
    4. காரணப் பெயர்கள்
    5. இன எழுத்துகள்
    6. மயங்கொலிகள்
  3. முறை (எழுத்துகளின் வரிசை)
  4. பிறப்பு (இடப்பிறப்பு, முயற்சிப் பிறப்பு)
    1. இடப்பிறப்பு, முயற்சிப் பிறப்பு
    2. நன்னூல்படி, எழுத்துப் பிறக்கும் இடமும் உறுப்பும்
  5. உருவம் அல்லது வரி வடிவம்  
  6. மாத்திரை (ஒலிக்கும் கால அளவு)
  7. முதல் (மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள்)
  8. ஈறு அல்லது இறுதி (மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள்)
  9. இடைநிலை (இடையில் வரும் எழுத்துகள்)
  10. போலி (முன்னர் நின்ற எழுத்திற்குப் பதிலாக வேறு எழுத்து வந்து அதே பொருள் தருவது)

எழுத்தியல் - 1. எண் (நூற்பா 58 - 61)

நன்னூல் - நூற்பா 58:
மொழிமுதற் காரணம் ஆம்அணுத் திரள்ஒலி
எழுத்துஅது முதல்சார்பு எனஇரு வகைத்தே. - பவணந்தி முனிவர்

விளக்கம்: மொழிக்கு முதற்காரணமாக அமைந்து, அணுத்திரளின் காரியமாகத் தோன்றும் ஒலியே எழுத்து ஆகும்; அது முதலெழுத்து, சார்பெழுத்து என இருவகைப்படும்.

நன்னூல் - நூற்பா 59:
உயிரும் உடம்புமாம் முப்பது முதலே. - பவணந்தி முனிவர்

விளக்கம்: உயிர் எழுத்துகள் பன்னிரண்டும், மெய் (உடம்பு) எழுத்துகள் பதினெட்டும் ஆகிய முப்பது எழுத்துகளும் முதலெழுத்துகள் ஆகும்.

நன்னூல் - நூற்பா 60:
உயிர்மெய் ஆய்தம் உயிரளபு ஒற்றளபு
அஃகிய இஉ ஐஔ மஃகான்
தனிநிலை பத்தும் சார்பெழுத் தாகும். - பவணந்தி முனிவர்

விளக்கம்: உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம், ஔகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் ஆகிய பத்தும் சார்பெழுத்துகள் ஆகும்.

நன்னூல் இலக்கணம் – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (TNPSC FAQ)

1. நன்னூலை இயற்றியவர் யார்?

நன்னூலை இயற்றியவர் பவணந்தி முனிவர். சீயகங்கன் என்ற சிற்றரசனின் வேண்டுகோளுக்கிணங்க இந்நூல் இயற்றப்பட்டது.

2. நன்னூலில் மொத்தம் எத்தனை நூற்பாக்கள் மற்றும் இயல்கள் உள்ளன?

நன்னூலில் பாயிரம் (55 நூற்பாக்கள்), எழுத்ததிகாரம் (5 இயல்கள், 208 நூற்பாக்கள்), சொல்லதிகாரம் (5 இயல்கள், 262 நூற்பாக்கள்) என மொத்தம் 525 நூற்பாக்கள் மற்றும் 10 இயல்கள் உள்ளன.

3. பாயிரத்தின் வகைகள் யாவை?

பாயிரம் பொதுப்பாயிரம் (நூற்பா 1–46) மற்றும் சிறப்புப்பாயிரம் (நூற்பா 47–55) என இரு வகைப்படும். பொதுப்பாயிரம் நூல், நுவல்வோன், நுவலும் திறன், கொள்வோன், கோடல், கூற்று ஆகியவற்றின் அடிப்படையில் அமையும்.

4. நூல்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

நூல்கள் முதல்நூல், வழிநூல், சார்புநூல் என மூன்று வகைப்படும்.

5. TNPSC பொதுத்தமிழ் தேர்வில் நன்னூல் பகுதியின் முக்கியத்துவம் என்ன?

TNPSC Group 2, Group 4, VAO மற்றும் TET தேர்வுகளின் பொதுத்தமிழ் இலக்கணப் பகுதியில் எழுத்து, சொல் மற்றும் இலக்கண மரபு தொடர்பான கேள்விகளுக்கு நன்னூல் அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.